

புறநகர் மின்சார ரயில் சேவை
Southern Railway : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரை புறநகர் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள், புற நகரிலிருந்து வேலைக்கு வருபவர்கள், சில்லறை வியாபாரம் செய்பவர்கள் என தினம் தினம் மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
மக்களின் தேர்வு புறநகர் ரயில்கள்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் என நீண்ட பயணங்களுக்கு பேருந்தை விட ரயில் பயணம் உகந்தது என்பதால் பெரும்பான்மையான மக்களின் தேர்வாக மின்சார ரயில் தான் உள்ளது.
44 ரயில்கள் ரத்து
ஆனால் இப்போது எழுப்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
எழுப்பூரில் மறுசீரமைப்புப் பணி
ஏற்கெனவே எழுப்பூரில் நடைபாதை மாற்றியது நெருக்கடியாக இருந்தது. ஏனென்றால் எழுப்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் முறையே 10 ,11 ஆம் நடைமேடைகளில் தான் நிற்கும்.
இது பயணிகள் வெளியே செல்வதற்கும் , ரயில் நிலையத்திற்குள் வருவதற்கும் உகந்த வழி .
எழுப்பூரில் நடைபாதை மாற்றம்
ஆனால் , மறுசீரமைப்பு பணிகள் காரணமாக கடந்த 8ஆம் தேதி முதல் மின்சார ரயில்கள் நடைமேடை 10,11 இல் நிற்காமல் இனிமேல் 5 மற்றும் 6ஆம் நடைமேடைகளில் நின்று செல்லும் என்றும் அறிவித்தது. இதுவே மக்களுக்கு பெரும் சிரமமாக இருந்தது.
அவதிக்குள்ளான மக்கள்
தெற்கு ரயில்வே பிப்ரவரி 20 ஆம் தேதி இரவு முதல் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால் அன்று காலை முதலே ரயில் நீண்ட நேரத்திறகு வராமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
30 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் வந்ததால் கால் வைப்பதற்கு கூட இடமில்லா அளவிற்கு கூட்டம் அலைமோதியது.
பீச் ஸ்டேஷன் செல்ல 2 மணி நேரம்
தொடர்ந்து கோடம்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் என ஆங்காங்கே ரயிகள் ஒன்றன்பின் ஒன்றாக நின்ற நிலையில், சென்னை கடற்கரையை அடைவதற்கே கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகிவிட்டது.
தண்டவாளத்தில் நடந்து சென்ற மக்கள்
இதற்கிடையில் என்ன செய்வது எனத் தெரியாமல் பாதி வழியில் நின்ற ரயிலில் இருந்து இறங்கி மக்கள் சாரை சாரையாக தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.
போதிய பேருந்து இல்லாமை
மின்சார ரயில் குறைக்கப்பட்டிருப்பதால் பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தி இருப்பர் என்ற நம்பிக்கையில் மக்கள் பேருந்து நிலையங்களுக்கு படையெடுக்க தொடங்கினர். ஆனால் அங்கும் அவர்களுக்கு ஏமாற்றம்.
மின்சார ரயில் , பேருந்து வசதி என இரண்டுமே இல்லாமல் மக்கள் கூட்டம் எங்கும் அலைமோதியது. அடுத்த 45 நாட்களுக்கும் இதே நிலைதான் நீடிக்குமா? என்ற மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ரயில்வே விளக்கம்
மின்சார ரயில்கள் ரத்து செய்யபட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ள நிலையில் ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. தற்காலிக சிரமம் நாளைய எழுப்பூரை சிறந்ததாக்கும் என்றும் கூறியுள்ளது.
மறுசீரமைப்புப் பணிக்கு 734.91 கோடி ஒதுக்கீடு
’கதி சக்தி’ என்ற ரயில்வேயின் திட்டத்தின் கீழ் எழும்பூர் ரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் விதமாக ரூ. 734.91 கோடி ஒதுக்கீட்டில் தற்போது மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வரப்போகும் பிரம்மாண்ட வசதிகள்
இந்த மறு சீரமைப்பு பணிகளின் மூலம் பிரம்மாண்டமான புதிய கட்டிடங்கள், பயணிகள் நெருக்கடி இல்லாமல் செல்வதற்காக விசாலமான பாதைகள், அடுக்குமாடி பார்க்கிங் வசதி, அனைத்து நடைபாதைகளையும் இணைக்கும் வகையில் சுமார் 36 மீட்டர் அகலத்தில் பிரம்மாண்ட நடை மேம்பாலம்,
முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற 36 எஸ்கலேட்டர்கள், மற்றும் நவீன வசதிகளுடன் குளிர்சாதன காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட உள்ளது.
45 நாட்களிலேயே நிறைவு பெற்று விடுமா ?
மேற்கண்ட பணிகள் 45 நாட்களிலேயே நிறைவு பெற்று விடுமா ? அல்லது மேலும் நீட்டிக்கடுமா? பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே ஏதேனும் மாற்று நடவடிக்கை எடுப்பார்களா என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.