அரசு பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள் '

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Government school and college hostels will now be called 'social justice hostels'
social justice hostel https://x.com/mkstalin
2 min read

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு :

‘எல்லார்க்கும் எல்லாம்’ கிடைக்கும் சமநீதியை நிலைநாட்டுவதாக நமது அனைத்துத் திட்டங்களும் முயற்சிகளும் அமைந்துள்ளன. சாதியின் பேரால், மதத்தின் பேரால், பொருளாதார வலிமையின்மையால் எந்த வாய்ப்பும் யாருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பதை மனதில் வைத்தே, அனைவருக்கும் பொதுவான சம வாய்ப்புகளை வழங்கி, அனைத்துச் சமூகத்தையும் மேலே கொண்டு வர முயற்சித்து வருகிறோம். அனைத்துத் துறை வளர்ச்சியானது, அனைத்து சமூக வளர்ச்சியாக இன்று விரிவடைந்து வருவதையும் பார்க்கிறோம்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 29.04.2025 அன்று நான் பேசும் போது, “இந்த மண்ணின் ஆதிக் குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாகக் காலனி என்ற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமைக்கான குறியீடாகவும் வசைச் சொல்லாகவும் இது மாறியிருப்பதால் இனி இந்தச் சொல் அரசு ஆவணங்களிலிருந்தும், பொதுப் புழக்கத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டேன்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வைத்த கோரிக்கைகளில் மிக முக்கியமானது, “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள சாதிப் பெயரில் இறுதி எழுத்தில் முடிவடையும் ‘N’ மற்றும் ‘A’ என்பதற்குப் பதிலாக ‘R’ என பெயர் மாற்றம் செய்து மக்களுக்கு உரிய மரியாதையைக் கிடைக்க வழி செய்யும் வண்ணம் உரிய சட்டம் இயற்ற, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்பதாகும்.

நமது சமுதாயத்தின் பல்வேறு பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் தொடர்ந்து கல்விப் பயின்றிட, நமது மாநிலமெங்கும் பல்வேறு அரசுத் துறைகளின்கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் துறையின்கீழ் செயல்பட்டு வரும் 727 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 41,194 மாணவ மாணவிகளும், 455 மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 26,653 மாணவ மாணவிகளும். 157 சீர்மரபினர் விடுதிகளில் 9,372 மாணவ மாணவிகளும், 20 சிறுபான்மையினர் நல விடுதிகளில் 1,250 மாணவ மாணவிகளும் தங்கிப் பயின்று வருகின்றனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,332 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் 98,909 மாணவ மாணவியர்களும், 48 பழங்குடியினர் விடுதிகளில் 2,190 மாணவ மாணவியர்களும் சேர்ந்து பயின்று வருகின்றனர்.

இவ்வாறு மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,739 விடுதிகளில் 1,79,568 மாணவ மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த மாணவ மாணவிகளின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நடவடிக்கைகளைக் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. இந்த மாணவர்களுக்கான உணவுச் செலவு மற்றும் பல்வேறு படிகளை உயர்த்தியது. விடுதிகளின் கட்டமைப்பு மேம்பாடு, அவர்களுக்குச் சிறப்புத் திறன் பயிற்சிகள் போன்ற பல்வேறு முன்னோடி முயற்சிகளின் காரணமாக மாணவர்களின் கற்கும் திறன் மேம்பட்டு உள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அடித்தட்டுக் குடும்பங்களைச் சார்ந்த இந்த மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் அதே வேளையில், நமது எதிர்கால சமுதாயத்தை ஒரு சமத்துவ சமூகமாக உருவாக்கிட, சாதி சமய உணர்வுகளைக் களைவது இன்றியமையாதது. இந்த நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தற்போது பல்வேறு சாதி சமயப் பிரிவுகளின் பெயர்களின்கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதிகளின் பெயர்களை மாற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் ‘சமூக நீதி விடுதிகள்’ என்ற பொதுப் பெயரால் இனி அழைக்கப்படும். விடுதிகளுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளதே தவிர. மாணர்களுக்கான உரிமைகள், சலுகைகள், உதவிகள் அனைத்தும் அப்படியே தொடரும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. இவ்விடுதிகளில் நமது பெரும் தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டு செயல்பட்டு வரும் சில விடுதிகளும் உள்ளன. அந்த விடுதிகள் அத்தலைவர்களின் பெயரோடு சமூகநீதி விடுதி என்று சேர்த்து அழைக்கப்படும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in