காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை
Hindu Munnani Kadeswara Subramaniam on Thiruparankundram Deepam Issue Case : மதுரை உயர் நீதிமன்ற அமர்வின் தீர்ப்பை அடுத்து, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருப்பரங்குன்றம் ஒட்டுமொத்த மலையும் முருகனுக்கே சொந்தம் என்று ஆங்கிலேய காலத்திலேயே தீர்ப்பு வந்தது. இந்நிலையிலும் மலையில் உள்ள தீபத்தூணில் திருக்கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்திரவிட்ட நிலையிலும் தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் தீபத்தூணில் தீபம் ஏற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை பிறப்பித்துள்ளது
இந்த அவல நிலை பல ஆண்டுகளாக நீடித்து வந்தது, பக்தர்கள் மனம் வெதும்பி இருந்த நிலையில் பக்தர்கள் சிலர் வழக்கு தாக்கல் செய்ததன் மூலம் உயர்நீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்ற அனுமதி அளித்து வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவு மூலம் மலையில் தீபம் ஜொலிக்கும் என்று பேராவலில் பக்தர்கள் இருந்த நிலையில், ஆளும் திமுக அரசு நீதிமன்ற தீர்ப்பை நீர்த்துப் போகச்செய்யும் வகையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, தீபம் ஏற்றுவதைத் தடுக்க, எல்லா வழி வகைகளையும் செய்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்ட நிலையில், நீதிமன்றம் மத்திய தொழில்பாதுகாப்பு படையினரை பாதுகாப்புக்கு அனுப்பி தீபம் ஏற்ற அனுமதித்ததையும், ஆளும் திமுக அரசு போலி ஆவணங்களை உருவாக்கி நீதிமன்ற தீர்ப்பை முடக்கியது என்பதை நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே உள்ள தீர்ப்பின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத் துறையும்,கோயில் நிர்வாகமும் இணைந்து தீபம் ஏற்ற வேண்டிய கடமை இருந்தும் தற்போதைய தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக கோயில் நிர்வாகமும் அறநிலையத்துறையும் மேல் முறையீடு செய்தது.அதுவும் கோயிலைப் பாதுகாக்க பக்தர்கள் கொடுத்த நிதியைக் கொண்டே திருக்கோயில் உரிமைக்கு எதிராக வழக்காட பயன்படுத்தியது உச்சகட்ட அநியாயமாகும்.
தீபம் ஏற்றலாம் என்று உறுதியளித்த நீதிமன்றம்
இந்நிலையில் தமிழக அரசும், அறைநிலையத் துறையும், கோயில் நிர்வாகமும், தர்கா மற்றும் வக்ஃப் போர்டும் செய்த மேல் முறையீடுகள் அனைத்தும் முடித்து வைக்கபட்டு இன்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்திரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் மலை மீதுள்ள தூண், தீபத்தூண் தான் என்று உறுதி செய்தும், தீபம் ஏற்றுவது குறித்து தனி நீதிபதியின் உத்தரவிற்கு முன்பாக ஏற்கனவே பிறப்பிக்கபட்ட உத்தரவுகள் முரண்படவில்லை என்றும், தீபத்தூண் உள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமான இடம் என்றும் ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை தீபத்திருநாள் அன்று திருப்பரங்குன்றம் தேவஸ்தானம், மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அறுதியிட்டு உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
நீதியை நிலைநாட்டியுள்ளது மதுரை உயர் நீதிமன்றம்
அந்த வகையில் தீபம் ஏற்றுவதைத் தடுக்க திமுக அரசு செய்த அத்தனை சதிசெயல்களையும் முறியடித்து நீதியை நிலைநாட்டியுளது மதுரை உயர் நீதிமன்றம். மேலும் திமுக அரசின் இந்து விரோதப் போக்கிற்கு சம்மட்டி அடிகொடுக்கும் விதமாக, தீபம் ஏற்றாததற்கு அரசு சொன்ன சட்டம் - ஒழுங்கு காரணத்தை, கற்பனை பூதத்தை முன்னிறுத்தி நீதிமன்றத்தை ஏமாற்ற முயலக்கூடாது என்று குட்டு வைத்துள்ளது. எனவே இந்த தீர்ப்பு இந்துக்களின், முருக பக்தர்களின் உரிமையை நிலைநாட்டிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு அந்த வகையில் தீர்ப்பை இந்து முன்னணி மனதார வரவேற்கிறது.. பாரட்டுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.