ஜூலை 14 ஆம் தேதி திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.
thiruparankundrammurugan kovil kumbabishekam
thiruparankundrammurugan kovil kumbabishekam
1 min read

திருப்பரங்குன்றம் இயற்கை எழில் சூழ்ந்துள்ள அழகுமிக்க மலையின் அடிவாரத்தில், ஊரின் நடுவே குன்றே கோவிலாக எழுந்துள்ள எழில்மிகு திருக்கோயிலே அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடாக அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் முறையாகப் பெற்ற வரலாற்றுப் புகழ் பெற்ற தலமாகும்.

திருப்பரங்குன்றம் 275 தேவாரத் தலங்களில் ஒன்றாகப் பெருமை பெற்று உள்ளது. இத்திருக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1050 அடி உயரத்தில் உள்ளது.

இத்தலம் திருப்பரங்கிரி, சுமந்தவனம், பராசலதலம், குமாரபுரி, விட்டணுதுருவம். கந்தமாதனம், கந்தமலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம், சுவாமிநாதபுரம், முதற்படைவீடு என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

மூலவராக சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சூரபத்மனை வீழ்த்திய பிறகு முருகன், இந்திரனின் மகளான தேவயானையை மணந்த இடம் என நம்பப்படுகிறது. எனவே திருமணம் செய்ய ஏற்ற சிறந்த தலமாகவும் இது கருதப்படுகிறது. இங்கு திருமணம் செய்துகொள்வோர் நல்வாழ்க்கையும், வளமான வாழ்வையும் பெறுவார்கள் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடம் உள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in