

Transport Minister Vijay Prabhakaran Speech In Salem School Event
போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார். பின்னர் பள்ளி மாணவர்களிடம் தனது பள்ளிப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
சேலத்தில் நலத்திட்ட கட்டிடங்கள் திறப்பு
சேலம் மாவட்டம், ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வகுப்பறைக் கட்டடம், சுகாதாரத் துணை மையம் உள்ளிட்டவற்றை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று (ஜூலை 21) திறந்து வைத்தார்.
அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
இதனைத் தொடர்ந்து, பெத்தநாயக்கன்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடங்களைத் திறந்து வைப்பதற்காக அமைச்சர் சென்றார். அங்கு பள்ளி குழந்தைகள் அவருக்குப் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாணவர்களிடம் அமைச்சர் நெகிழ்ச்சி பேச்சு
திறப்பு விழாவிற்குப் பிறகு பள்ளிக் குழந்தைகளுடன் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது...
என் குழந்தையைப் பள்ளியில் வகுப்பறையைக் கூட்டச் சொன்னால்கூட நான் தவறாக நினைக்க மாட்டேன். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் நாங்கள்தான் வகுப்பறையையும் பள்ளி வளாகத்தையும் சுத்தப்படுத்துவோம் என்றார்.
உழைத்தால் தான் உயர்வு
அதுமட்டுமின்றி, வகுப்பறையில் உள்ள கரும்பலகைக்கு கருமை பூசியதும் நாங்கள்தான். அப்படிப் படித்து உழைத்ததால்தான் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும். வாழ்க்கையில் படிப்புதான் மிக முக்கியம். பள்ளியில் ஆசிரியர் சொல்வதையும், வீட்டில் பெற்றோர் சொல்வதையும் கேட்டு நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பள்ளி மாணவர்களிடையே அமைச்சர் விஜயபிரபாகரன் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
=====