

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
Thiruparankundram Karthigai Deepam 2025 Date in Tamil : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை மகா தீபம்
மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, பாதுகாப்பு காரணமாக, ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது. அதனால், கோவில் முன்புறம் உள்ள துாணில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இதுவரை மாறவில்லை.
உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு
இதை மாற்றக்கோரியும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க உத்தரவிட கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தீபத்தூணில் மகாதீபம் - கோரிக்கை
ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவில், ” திருப்பரங்குன்றம் மலையில் டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்ய, சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினேன். மலை உச்சியிலுள்ள, பழமையான தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற சட்ட ரீதியாக தடை இல்லை.
தர்காவில் இருந்து, 15 மீட்டர் தொலைவில் உள்ளது. பதிலாக, மலையிலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அது சட்டவிரோதம். தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரசுத் தரப்பு வாதம்
இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அறநிலையத்துறை தரப்பு மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், 'பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோவில் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படுகிறது. தவறான உள்நோக்கில், ஆதாரம் இல்லாமல் ராமரவிக்குமார் மனு செய்துள்ளார்' என வாதிட்டார்.
கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி
இதைத்தொடர்ந்து, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு நேரில் சென்றும் பார்வையிட்டார். இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மலை உச்சியில் இருக்கும் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என தெரிவித்துள்ளார். இந்து சமயநிலையத்துறை மற்றும் வக்பு வாரியத்தின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு இவ்வாறு உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
============