
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பதிவு :
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசிக்கொண்டிருக்கும்போதே, கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் வெளியேறியதைப் படம்பிடித்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும்படியும், அவர்கள் கேமராக்களைப் பறிமுதல் செய்யும்படியும் , வைகோ கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து, அங்கிருந்த மதிமுக தொண்டர்கள், ஊடகவியலாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதனால், பல ஊடக நண்பர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
ஒரு மூத்த அரசியல் தலைவரான வைகோ , சிறிதும் பொறுப்பற்ற முறையில், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூறியிருப்பதும், ஊடகவியலாளர்கள் மதிமுக கட்சித் தொண்டர்களால் தாக்கப்பட்டதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
வைகோ , பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களிடம் நிச்சயம் நேரில் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்திய மதிமுக கட்சியினர் மீது, காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்தப்பதிவில் தெரிவித்துள்ளார்.