

Minister Sengottaiyan School Student ID Card Controversy
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள செங்கோட்டையன் தனது சொந்த தொகுதியான கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், பொதுமக்கள் தங்களது வருமானம், சாதி, இருப்பிடம் போன்ற சான்றிதழ்களை ஆண்டுதோறும் பெற அலைவதைத் தவிர்க்கும் வகையில், அனைத்து விவரங்களும் அடங்கிய ஒரே ஒரு 'அடையாள அட்டை' வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட திட்டம்: இணையத்தில் சான்றிதழ்கள்
பட்டா, இறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை மற்றும் கைம்பெண் உதவித்தொகை போன்ற அனைத்து விவரங்களும் பொதுமக்கள் எளிதாகத் தெரிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் பதிவேற்றப்படும்.
புதிய அடையாள அட்டை
ஆண்டுதோறும் சாதி சான்றிதழ் போன்ற ஆதார சான்றிதழ்களை வாங்கும் தற்போதைய நடைமுறை மாற்றப்படும். அதற்கு பதிலாக, முகவரி, சாதி சான்றிதழ், ரத்த வகை, ஆதார் அட்டை மற்றும் தொலைபேசி எண் ஆகியவை இணைக்கப்பட்ட ஒரு பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படும்.
முதற்கட்ட அமலாக்கம்
இந்த ஒருங்கிணைந்த புதிய அடையாள அட்டையை முதற்கட்டமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்னாள் அமைச்சர்கள் எதிர்ப்பு
அரசுப் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் 'சாதி' குறித்த விவரங்களை இணைக்கப் போவதாக அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்த அறிவிப்புக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை எதற்கு? மாணவர்களிடையே சாதி அடையாளத்தை ஊக்குவிக்கும் வகையிலான இந்த கருத்து குறித்து, தமிழ்நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு அமைச்சர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
இதுதான் இந்த அரசின் நிலைப்பாடா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்து
"மாணவர்களின் இரத்தம் மற்றும் ஆதார் எண்களை அறிய வேண்டிய அடையாள அட்டையில், தேவையின்றி சாதி குறித்த தகவல்களை சேர்ப்பது முற்றிலும் தேவையற்றது!
இடஒதுக்கீடு மற்றும் அரசின் சமூக நீதிப் பயன்களைப் பெற வேண்டிய இடங்களில் மட்டுமே சாதி சான்றிதழ் விவரங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளி ஐடி கார்டுகளில் இது தேவையா என்பதற்கு அமைச்சர் விரிவான பதில் அளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி விவரங்களை சேர்ப்பது மாணவர்களிடையே தேவையற்ற பிரிவினையை உருவாக்குமா அல்லது நிர்வாக ரீதியாக அது பயனுள்ளதாக இருக்குமா என்பது குறித்த விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.
=====