

Music Director James Vasanthan About Street Dog Issue : ஜேம்ஸ் வசந்தன் பதிவின் விவரம் வருமாறு : என் மனைவி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தெருவோர விலங்குகளுக்கு உணவு, உறைவிடம், மருத்துவம், தடுப்பூசி போன்றவற்றைக் கொடுத்து பணி செய்துவருகிறார்.
ஒரு கட்டத்தில் 40-50 நாய்களுக்கு தினமும் சமைத்து, காரை எடுத்துக்கொண்டு போய் நின்று பரிமாறி பார்த்துக்கொண்டு வந்தார். நான் அதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கச் சொல்லி அறிவுறுத்தி இன்று அது சிலவற்றோடு நிற்கிறது. அதற்கென தனியாக ஆட்களும் வைத்து அவர்களுக்கு சம்பளமும் கொடுத்து வருகிறோம்.
ஒவ்வொரு நாயாக எங்கள் காரில் ஏற்றிக்கொண்டு போய் கருத்தடை செய்வதும், தடுப்பூசிகள் போடுவதும் என ஒவ்வொரு முறையும் 4-5 ஆயிரம் ரூபாய் செலவழித்து வந்தோம். சில சமயங்களில் நள்ளிரவில் வண்டிகளில் அடிபட்டுக் குற்றுயிராய் கிடந்தவற்றை காரிலேற்றி மருத்துவரைத் தேடி அலைந்து, அவர்களை எழுப்பி வைத்தியம் பார்க்கச்செய்த நிகழ்வுகளும் உண்டு.
சாலைகளில் தாயில்லாமல் அலைந்துகொண்டிருந்த குட்டி நாய்களை எடுத்துக்கொண்டு வந்து பராமரித்ததும் உண்டு. எங்கு போய்விட்டு வருகிறோமோ அந்த உணவகத்தின் அல்லது திரையங்கின் பெயரையே அவைகளுக்குச் சூட்டிவிடும் வழக்கமும் இருந்தது.
என் பிள்ளைகள் மூவரும் எங்களோடு இந்தப் பணிகளில் மனமுவந்து இணைந்து செயல்படுவதும் உண்டு. அவற்றின் அன்பையும், உணர்வுகளையும் முழுமையாக உணர்ந்த பலரில் நாங்களும் சிலர்.
நம்பமுடியாத சில நிகழ்வுகளும் உண்டு. "இங்க போனா சோறு கிடைக்கும்; நல்லா கவனிப்பாங்க" ன்னு எங்களைத் தெரிந்த நாய்கள் சில சென்று பிற புதிய நாய்களை அழைத்துக்கொண்டு வரும். சில சமயங்களில் அவை தாங்களாகவே தனியாக வந்து எங்கள் வீட்டு வாசலில் நிற்கும். இரவோடு இரவாக பலர் வந்து குட்டி நாய்களை எங்கள் வீட்டுவாசலில் விட்டுவிட்டுச் செல்வதும் உண்டு. அவை எல்லாமே இன்று வரை எங்களோடுதான் இருக்கின்றன.
நாங்கள் தெருவில் இறங்கி நடந்தால் ஒரு பெரிய படையே எங்களோடு வரும். மற்ற பகுதியைச் சேர்ந்தவை இவற்றோடு சண்டையிட பெரிய களேபரம் ஆகிவிடும். அதனால் ஒரு கட்டத்தில் நாங்கள் இரவு காலாற நடப்பதையே நிறுத்திவிட்டோம்.
நாங்கள் எங்கள் வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் இவற்றை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்த காலத்தில் நாங்கள் வெளியே நிகழ்வுகளுக்குப் போவதோ, வெளியூருக்கு, வெளிநாட்டுக்குப் போவதோ, எல்லாமே அவற்றை வைத்துதான் திட்டமிட வேண்டியிருந்தது. பல தியாகங்களைச் செய்யவேண்டியிருந்தது.
எங்கள் வீட்டுக்கு புதிதாக வரும் பலர் அவற்றைக் கண்டு அச்சப்படுவது வாடிக்கையாக இருந்தது. ஆனால் ஒரு நாய்கூட ஒருவரைக்கூட கடித்ததோ, விரட்டியதோ, மிரட்டியதோ கிடையாது. சாந்தமான வாழ்க்கை அவற்றிற்கு பழகிப்போயிருந்தது. ஆனால் சில சமயங்களில் தெருவில் விரைவாக வண்டிகளை ஓட்டுபவர் சிலரை அவை துரத்தியது உண்டு. சிலர் எங்களிடம் புகார் செய்ததும் உண்டு.
அவற்றை அப்படியே வெளியே வாழ பழக்கிவிட்டோம். வந்து சாப்பிட்டு விட்டுச் சென்றுவிடும். இவற்றின் அன்பு, அறிவு, பாசம், பல்வேறு உணர்வுகள், குணநலன் போன்றவற்றைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். நாங்களே அதில் தெரியாமல் நுழைந்து சிக்கிக்கொண்டவர்கள்தான். இது ஒருபுறம் இருக்கட்டும்.
இப்போது அன்றாடம் செய்திகளில் வெறிநாய்க்கடி மரணம், பெரும் காயம் என கேள்விப்படும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது.
மேலும் படிக்க : சமூக சவாலாக மாறி வரும் தெருநாய்கள் : காரணங்களும் தீர்வுகளும்
இவ்வுயிர்கள் என்னதான் அன்பாக, அறிவோடு இருந்தாலும் "மனித உயிர்" மேன்மையானது. விலைமதிப்பற்றது. அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டுமோ மனிதாபிமானத்திற்கு உட்பட்டு நாம் சில சமூக நடவடிக்கைகளை எடுத்தே ஆகவேண்டும்.
இன்னொரு புறத்தில் இதைப்போன்ற சூழல்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சில முன்னெச்சரிக்கை அறிவுரைகளையும் நாம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்(James Vasanthan About Street Dog Issue) பதிவிட்டுள்ளார்.