ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகள்
Egg Rate Today in Namakkal: நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இதன்மூலம் நாள்தோறும் 7 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு அனுப்பப்படுகிறது.
தேசிய முட்டை குழுே விலை நிர்ணயம்
இதேபோல் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
தவிர, நாமக்கல்லில் இருந்து நாள்தோறும் வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) என்ற தனியார் அமைப்பு விலை நிர்ணயம் செய்கிறது. அந்த விலையை கோழிப்பண்ணையாளர்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.
குளிர்காலம் மற்றும் விழாநாட்கள் - முட்டை விலை உயர்வு
இதன்படி கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 590 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதுவே நாமக்கல் மண்டல முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலையாக இருந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி நாமக்கல் மண்டல முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலையாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 625 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு பிறப்பு மற்றும் கடுங்குளிர் காரணமாக முட்டை விலை அதிகரித்து வருவதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுந்தராஜு பதில்
இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் கே.சுந்தரராஜூ ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதம் முட்டை விலை உயர்ந்து வருகிறது.
விலை உயர்வுக்கு கடும் குளிர் நிலவுவதே முக்கிய காரணமாகும். குளிர் சீஸன் நிலவுவதால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. அதேவேளையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை நெருங்கி வருகிறது.
இந்த பண்டிகைகளில் கேக் முக்கிய இடம் பிடிக்கிறது. கேக் தயாரிப்பிற்காக முட்டை அதிகளவு கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவும் விலை ஏற்றத்திற்கான முக்கிய காரணமாகும் என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது நாளொன்றுக்கு 80 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், ஏற்றுமதி அதிகரிப்பும் முட்டையின் விலை உயர்வுக்கு ஒரு காரணம்.
விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு
முட்டை விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குளிர் மற்றும் பண்டிகை சீஸன் குறைந்தால் முட்டை விலை குறைய வாய்ப்புள்ளது. கடும் குளிர் காரணமாக முட்டை உற்பத்தி 5 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை :
சென்னை 690, பர்வாலா 675, பெங்களூரு 690, டெல்லி 710, ஹைதராபாத் 666, மும்பை 725, மைசூரு 690, விஜயவாடா 700, ஹொஸ்பேட் 630, கொல்கத்தா 735.
கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.100 என அறிவிக்கப்பட்டுள்ளது. முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.116 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.