

தவெகவில் நாஞ்சில் சம்பத்
Nanjil Sampath Join TVK Latest News in Tamil : எந்த தேர்தலையும் சந்திக்காத கட்சி நடிகர் விஜய்யின் தவெக. வரும் தேர்தலில் அந்தக் கட்சி தனித்துப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது சமீபத்தில் அந்த கட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார்.\
அதன் தொடர்ச்சியாக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார். இதற்கு முன்னர், திமுக, மதிமுக, அதிமுக, அமமுகவில் நாஞ்சில் சம்பத் இருந்தார்.
அரசியல் விவாதங்கள், நேர்காணல்
அதன் பின்னர் எந்த கட்சியிலும் சேராமல் அரசியல் தொடர்பான பொது விவாத மேடைகளிலும், நேர்காணலிலும் பேசி வந்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டங்களில் சில ஆண்டுகளாக பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
திரைப்படங்களில் நடித்தார்
சில திரைப்படங்களிலும் நடித்தார். இளம் நடிகர் ஒருவர் படத்தில் அரசியல்வாதியாக அவர் நடித்து, 'துப்புனா துடைச்சுக்குவேன்' என்று பேசிய வசனம் பிரபலமானது.
அண்மைக்காலமாக தவெகவுக்கு ஆதரவான கருத்துகளை பொது வெளியில் அவர் பேசி வந்த நிலையில் தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.
அனுமதி
புதுச்சேரியில் வரும் 9ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை முதல்வர் ரங்கசாமியை பொதுச் செயலாளர் ஆனந்த் நேரில் சந்தித்து பெற்றுச் சென்றார்.
இதையடுத்து, டிச.9ம் தேதி புதுச்சேரியில் விஜய் கலந்து கொள்ளும் தவெக பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போது ஒவ்வொரு தலைவராக தவெகவில் இணைந்து வரும் நிலையில், அக்கட்சி பலம் பெற்று புதியதோர் தோற்றத்தில் வெளிவரும் என்று அரசியல் பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.
நாஞ்சில் சம்பத் உரை
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தான் 6 ஆண்டுகாக எந்த கட்சியிலும் இல்லை என்றும் விஜய் தன்னுடைய ஃபேன் என்று உரைத்ததாகவும், அதை கண்டு அவர் மெய் சிலிர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுதும் தவெகவின் ஒரு பிரச்சாரகனாக பவனி வர விஜய் அனுமதித்துள்ளார் என்று தெரிவித்துள்ள அவர், திமுகவின் அறிவுத்திருவிழாவில் என்னை திட்டமிட்டு ஒதுக்கினார்கள். ஆனால் எனக்கு யார் மீதும் கோபம் இல்லை.
யார் மீதும் வருத்தம் இல்லை. யாரையும் நான் திட்ட போவது இல்லை. விஜய் என்னை பார்த்த போது, நன்றாக நடத்தினார்,நான் உற்சாகமாக உள்ளேன், தமிழகத்தை பற்றி பேச நிறைய இருக்கிறது இனி பரபரப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.
நாஞ்சில் சம்பத் தவெக பொறுப்பு
இதைத்தொடர்ந்து கட்சியில் சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு பரப்புரை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், சிறந்த பேச்சாளர், நாஞ்சில் சம்பத் அவர்கள் தவெகவில் தன்னை இணைத்துள்ளார் என்றும், மக்களுக்கான அரசியலில் பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், அவருக்கு பரப்புரை செயலாளர் பதவி வழங்குவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.