

நெற்பயிர் சேதம்
NTK Chief Seeman on Relief for Paddy Crop Damage Due to Rain : டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நானும் டெல்டாக்காரன் தான் என விளம்பர வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின், அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாகக் கொள்முதல் செய்திட வேண்டும் எனவும் , பாதிப்புக்குள்ளான நெற்பயிர்களுக்கு ஏக்கர் ரூ.50,000 வீதம் நிவாரணம் வழங்கிடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
சீமான் அறிக்கை :
இதுதான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ள சீமான் விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய மறுக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மறுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடலா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு
ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, வெயிலிலும் மழையிலும் தங்கள் கடின உழைப்பினால் விளைவித்த நெல்மணிகளுக்கு உரிய விலை வேண்டியும், உரிய விவசாயிகள் காலங்காலமாகப் போராடி வருகின்றனர். ஆனால், திராவிட மாடல் திமுக அரசு உற்பத்தி செலவுக்கு இணையான, மிகக்குறைந்த கொள்முதல் விலையை மட்டுமே நிர்ணயித்து விவசாயிகள் வயிற்றில் அடித்து வருகின்றது. நெல் கொள்முதல் நிலையங்களில் ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் விவசாயிகளிடமிருந்து 40 ரூபாய் பெறப்படும் முறைகேட்டினைத் தடுக்க திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க : நடிகை வழக்கில் மன்னிப்பு கோரினார் சீமான் : முடித்து வைத்த SC
நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும்
மேலும், அமைச்சர்களுக்கு சொந்தமான நிலங்களில் விளைந்த நெல் மூட்டைகள் தொடங்கி ஆளுங்கட்சி பிரமுகர்கள் முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள் நெல் மூட்டைகளை எல்லாம் கொள்முதல் செய்த பிறகே ஏழை விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் அவலம் மாறுவது எப்போது? தமிழகத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளைத் தடுத்து, எவ்வித கையூட்டுக்கும் இடமளிக்காமல் சரியான எடையில், சரியான கொள்முதல் விலையை குறுவை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க வேண்டுமெனவும், தற்போதைய கனமழையால் பாதிக்கப்பட்ட காவிரி படுகை சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.