

Pachaiyappas College Chennai Converted into Co-Education College
இருபாலர் கல்வி நிறுவனமாக மாறும் பச்சையப்பன் கல்லூரி
இந்தியாவின் மிக பழமையான மற்றும் பாரம்பரியமிக்க உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை பச்சையப்பன் கல்லூரி, தனது 184 ஆண்டுகால கல்விப் பயணத்தில் ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
இக்கல்லூரியை இருபாலர் (Co-Educational) கல்வி நிறுவனமாக மாற்றித் தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.
பச்சையப்பன் கல்லூரி வரலாறு
கடந்த 1842-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரி, பல தலைமுறைகளாக சமூகப் பொறுப்புடன் கல்விச் சேவையாற்றி வருகிறது. தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த இருபாலர் அந்தஸ்து, கல்லூரியின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
மாணவர் சேர்க்கை சரிவுக்கு முற்றுப்புள்ளி
சமீபத்திய ஆண்டுகளில் இக்கல்லூரியின் பல்வேறு பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறைந்து வந்தது.
இந்த சேர்க்கை சரிவை சரி செய்யவும், கல்லூரியின் கல்வித் தரத்தை மேலும் வலுப்படுத்தவும், மாணவிகளையும் சேர்க்க அனுமதிக்குமாறு கல்லூரி நிர்வாகம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
கல்லூரி நிர்வாகத்தின் பரிசீலனையை ஏற்ற தமிழக அரசு
அந்தப் பரிசீலனையை ஏற்றுக்கொண்ட உயர்கல்வித்துறை, தற்போது மாணவிகளும் கல்வி கற்கும் வகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அனுமதியை வழங்கியுள்ளது.
நந்தனம் கலைக் கல்லூரி பாணியில் அதிரடி
முன்னதாக கடந்த 2024-ஆம் ஆண்டில், சென்னையில் உள்ள நந்தனம் ஆடவர் அரசு கலைக் கல்லூரியை இருபாலர் கல்லூரியாக தமிழக அரசு மாற்றியிருந்தது. அங்கு மாணவிகள் சேர்க்கப்பட்ட பிறகு, கல்லூரியின் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதம் பெருமளவில் உயர்ந்தது.
அதே பாணியைப் பின்பற்றி தற்போது பச்சையப்பன் கல்லூரியிலும் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வரவேற்பும் நன்றியும்
தரமான உயர்கல்விக்கான புதிய கதவுகளை மாணவிகளுக்கும் திறந்து விட்டுள்ள இந்த முடிவை பச்சையப்பன் கல்லூரியின் நிர்வாகம், முதல்வர், பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
"புகழ்மிகு பச்சையப்பர் பாரம்பரியத்தைப் போற்றுவோம்; அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான எதிர்காலத்தை உருவாக்குவோம்" என்று முனைவர் பேபி குல்னாஸ் தனது வாழ்த்தில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றிய தமிழக அரசு
நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், உயர்கல்வித் துறைக்கும் கல்லூரி நிர்வாகம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இதன் மூலம் பச்சையப்பன் கல்லூரி, சமத்துவ அடிப்படையிலான தனது அறிவுப் பணியை அடுத்த கட்டத்திற்கு தொடர்ந்து எடுத்துச் செல்ல தயாராகி வருகிறது.
புகழ்பெற்ற பச்சையப்பன் கல்லூரியில் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன்,பேராசிரியர் அன்பழகன்,ஈ.வி.கே.சம்பத், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பயின்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
=====