
அசோக் நகர் ரயில் நிலையம் :
Anbumani Ramadoss on Ashok Nagar Metro : சென்னை அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அசோக் நகர் என்ற பெயர் இந்தியில் மட்டும் எழுதப்பட்டு இருக்கிறது. தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் இடப்பெற்று இருப்பதை வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
நவீன இந்தித் திணிப்பு :
இதை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டு இருக்கும் அன்புமணி, “சென்னை அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில்(Ashok Nagar Metro Station) அசோக் நகர் என்ற பெயர் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியிலும் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசின் இந்த நவீன இந்தித் திணிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து மெட்ரோ ரயில் நிலைய நிர்வாகம் இந்தி எழுத்துகளை மட்டும் வெள்ளைக் காகிதத்தை ஒட்டி மறைத்திருக்கிறது. நவீன இந்தித் திணிப்பு முயற்சி கண்டிக்கத்தக்கது.
நிர்வகிப்பது தமிழக அரசு :
சென்னை மெட்ரோ ரயில் நிலைய திட்டம்(Chennai Metro Rail Project) மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டாலும், அதன் நிர்வாக அதிகாரம் தமிழக அரசிடம் தான் உள்ளது. தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி தான் அதன் மேலாண் இயக்குநராக உள்ளார். இத்தகைய சூழலில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் இடம் பெற்றது எப்படி? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
ரயில் நிலையத்தில் மும்மொழிக் கொள்கை :
மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் இந்தி திணிக்கப்பட்டால், அதற்கு எதிராக முழங்கும் முதல்வர் ஸ்டாலின் இப்போது அவரது அரசின் இந்தித் திணிப்பைக் கண்டும் காணாமலும் அமைதியாக இருப்பது ஏன்? இரு மொழிக் கொள்கை தான் தங்களின் கொள்கை என்று கூறி வரும் ஸ்டாலின் மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டும் மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தது ஏன்?
மேலும் படிக்க : சென்னையின் 4வது ரயில் முனையம் பெரம்பூர் : தெற்கு ரயில்வே ஒப்புதல்
காகிதம் ஒட்டி இந்தி மறைப்பு :
அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த இந்தித் திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு(Hindi Imposition) எழுந்ததன் காரணமாகத் தான் இந்தி எழுத்துகள் காகிதம் ஒட்டி மறைக்கப்பட்டன. இல்லாவிட்டால் மெட்ரோ ரயில் நிலைய நிர்வாகம் முழுவதும் இந்தி திணிக்கப்பட்டிருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இந்திக்கு வால் பிடிக்கும் திமுக :
திமுக அரசின் சொல்லுக்கும் செயலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. தமிழக மக்கள் மீது தமிழக அரசு நிறுவனம் மூலம் இந்தியை திணிக்க முயன்றதற்காக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
======