திமுக அரசின் வாக்குறுதி காற்றோடு போய்விட்டது- அன்புமணி ராமதாஸ்!

Anbumani : ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்களின் உண்ணாநிலை போராட்டத்திற்கு பாமக முழு ஆதரவையும் தரும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
PMK Leader Anbumani Ramadoss Slams DMK Government Election Promises Not Fulfilled for Teachers
PMK Leader Anbumani Ramadoss Slams DMK Government Election Promises Not Fulfilled for TeachersGoogle
3 min read

அன்புமணி எக்ஸ் பதிவு

Anbumani Ramadoss Slams DMK Government : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமலும், ஒருவேளை பதவி உயர்வு வழங்கப்பட்டாலும் அதற்கான உரிமைகளை வழங்காமலும் திமுக அரசு பாகுபாடு காட்டி வருகிறது.

கல்வி உரிமையை பறிப்பதா?

அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளை பல்கலைக் கழகங்களாக மாற்ற அனுமதிப்பதன் மூலம், அவற்றை அழிக்க முயன்ற அரசு, இப்போது ஆசிரியர்களின் உரிமைகளை பறிப்பதன் மூலம் மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.

அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு கிடைக்கவில்லை

அரசு பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கான பணி மேம்பாடு (Career Advancement Scheme - CAS) எனப்படும் பதவி உயர்வுக்கான அரசாணை கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதற்கான விதிமுறைகள் அதே ஆண்டு மே மாதம் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதன்படி அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வும், அதற்கான ஊதிய உயர்வும் நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த உரிமை அரசு உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

பதவி உயர்வு வழங்கப்பட வேண்டியது கட்டாயம்

அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு, அவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ள நிலையில் 4 ஆண்டுகளிலும், இல்லாவிட்டால் 5 ஆண்டுகளிலும் முதுநிலை உதவிப் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கி, அதற்கேற்ற வகையில் ஊதியத்தின் அளவும் ஒரு நிலை உயர்த்தப்பட வேண்டும்.

பதவி உயர்வு அவசியம்

அதன்பின் 5 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை உதவிப் பேராசிரியர்களுக்கு தேர்வு நிலை உதவிப் பேராசிரியர்களாகவும், அந்த நிலையில் 3 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு இணைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இணைப் பேராசிரியர்களாக 3 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு பேராசிரியர் நிலை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டியது கட்டாயம்.

உதவி பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மறுப்பு

பொதுவாக கல்லூரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப் படுவதில்லை. அதனால், அவர்கள் இணைப் பேராசிரிரியர்கள், அதற்கு அடுத்தபடியாக முதல்வர்கள் என்ற நிலையில் திருப்தியடைய வேண்டியுள்ளது.

இதுவும் கூட உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை என்பது தான் வேதனையான உண்மையாகும். சில கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு விதிகளின்படி பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

ஆனால், எந்த நாளில் இருந்து அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதோ, அதே நாளில் இருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு பெரும்பாலான உதவி பேராசிரியர்களுக்கு வழங்கப்படாமல் மறுக்கப்படுகின்றன.

ஊதிய உயர்வு நிலுவைத்தொகையும் வழங்கப்படவில்லை

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் கல்லூரிக் கல்வி இயக்குனரகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் கோவை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள சென்னை. திருச்சி, மதுரை, வேலூர், தருமபுரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான ஊதிய உயர்வும், நிலுவைத்தொகையும் வழங்கப்படவில்லை.

அரசு செய்த துரோகத்தால் மாணவர்கள் பாதிப்பு

ஊதிய உயர்வுடன் கூடிய முழுமையான பதவி உயர்வு வழங்கப்படாததால் ஆசிரியர்கள் மட்டும் பாதிக்கப் படவில்லை; மாறாக மாணவர்களின் உயர்கல்வி ஆராய்ச்சியும் பாதிக்கப்படுகிறது.

அரசு உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் போது, அது ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பில் (IFHRMS) சேர்க்கப்பட வேண்டும். அப்போது தான் பதவி உயர்வுக்கான நிதிப் பயன்களும், அதிகாரங்களும் கிடைக்கும்.

இந்த அமைப்பில் சேர்க்கப்பட்ட இணைப் பேராசிரியர்களால் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்ட முடியும்.

உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இணைப் பேராசிரியர் பதவி உயர்வு இந்த அமைப்பில் சேர்க்கப் பட்டிருந்தால், அவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் கூடுதலான மாணவர்களை முனைவர் பட்ட ஆராய்ச்சியில் சேர்த்துக் கொண்டிருக்க முடியும்.

ஆனால், உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களை பழிவாங்குவதாக நினைத்து அரசு செய்த துரோகத்தால் மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

திமுக வாக்குறுதி காற்றோடு போய்விட்டது

இந்தக் கோரிக்கை தொடர்பாக ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை கடந்த ஜூன் 23-ஆம் தேதி அழைத்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன், ஜூலை மாத ஊதியப் பட்டியலில் அவர்களின் ஊதிய உயர்வும், நிலுவைத் தொகையும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், திமுக அரசுக்கே உரிய மோசமான இலக்கணத்தின்படி அந்த வாக்குறுதி காற்றோடு போய்விட்டது.

இவை அனைத்தும் இயல்பாகவோ, இயலாமையாலோ நடந்தவையாகத் தோன்றவில்லை. உதவிபெறும் கல்லூரிகளை திட்டமிட்டு அழிக்கத் துடிக்கும் அரச சதியின் அங்கமாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது.

தனியார் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே அவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிக்கும் ஆபத்தான சட்டத்தை திமுக கொண்டு வந்தது.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தைத் தொடர்ந்து அந்தச் சட்டத்தை திமுக அரசு திரும்பப் பெற்றது.

அந்த சட்டத்தை திமுக கொண்டு வந்ததன் நோக்கம் என்னவோ, அதே நோக்கம் தான் ஆசிரியர்களுக்கு முழுமையான பதவி உயர்வு வழங்காமல் முடக்கி வைப்பதற்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆசிரியர்களின் உண்ணாநிலை போராட்டம் - பாமக ஆதரவு

முழுமையான பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகியவை டிசம்பர் 12-ஆம் தேதி முதல் நடத்தவிருக்கும் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான போராட்டங்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு வழங்க மறுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. எனவே, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

=================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in