கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் திமுக நீதியா : அன்புமணி ஆவேசம்!

தருமபுரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் தவறை மூடி மறைக்க கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
PMK Leader Anbumani Ramadoss Slams DMK on Dharmapuri Girl Student Abuse PT Teacher Issue Latest News in Tamil
PMK Leader Anbumani Ramadoss Slams DMK on Dharmapuri Girl Student Abuse PT Teacher Issue Latest News in TamilGoogle
2 min read

அன்புமணி வெளியிட்டுள்ள பதிவில்

Anbumani Ramadoss Slams DMK on Dharmapuri Girl Student Issue : அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த குடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு அந்தப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த மணிவண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை

இதற்குக் காரணமான ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கட்டப் பஞ்சாயத்து செய்து அவர் தப்பிக்க விடப்பட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசுப் பள்ளிகளில் பயிலும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை திமுக அரசு உருவாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

ஊர் பெரியவர்களிடம் பேசி பிரச்சினை முடிப்பு

குடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் பயின்று வரும் மாணவிகளை விளையாட்டுப் பாடவேளைக்கு பள்ளியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திடலுக்கு அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர் மணிவண்ணன், ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்துள்ளனர். அதனடிப்படையில் அவர் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக ஊர் முக்கியப் பிரமுகர்களிடம் பேசி பிரச்சினையைத் தீர்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

மாணவிக்கு நடந்த கொடுமை வெளியே வந்தது

அதைத் தொடந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த உள்ளாட்சி முன்னாள், இந்நாள் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சிலர் குடிப்பட்டியைச் சேர்ந்த துணை நடிகர் ஒருவரின் வீட்டில் கூடி கட்டப் பஞ்சாயத்து பேசியுள்ளனர்.

அப்போது பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்க ஆசிரியர் மணிவண்ணனிடம் ரூ.10 லட்சம் வாங்கிய கட்டப் பஞ்சாயத்து கும்பல், அதில் ரூ.6 லட்சத்தை பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு கொடுத்து விட்டு மீதமுள்ள தொகையை தங்களுக்குள் பிரித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதில் தொடர்புடைய ஒருவர் இந்த விவரங்களை பொதுவெளியில் தெரிவித்ததைத் தொடர்ந்து தான் மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமை வெளியில் தெரியவந்துள்ளது.

மாணவிக்கு கொடுமை இழைத்தவர்களை காப்பாற்றியுள்ளனர்

பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமை ஆகும். ஆனால், அந்த மாணவி பெரிய பின்புலம் இல்லாத குறும்பர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதையும், அவரது தந்தை இல்லாத நிலையில், தாயும் இந்த சிக்கல் தொடர்பாக அலையும் போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.இதை பயன்படுத்திக் கொண்டு மாணவிக்கு கொடுமை இழைத்தவர்களை ஒரு தரப்பினர் காப்பாற்றியுள்ளனர்.

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது மன்னிக்க முடியாத குற்றம்

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் ஆசிரியர் மணிவண்ணன் இதற்கு முன் பணியாற்றிய பள்ளிகளிலும் இதே குற்றச்சாட்டுக்கு ஆளாகி பணியிட மாற்றம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

ஆசிரியர்கள் எனப்படுபவர்கள் தாய், தந்தைக்கு அடுத்த நிலையில், கடவுளுக்கும் கூடுதலான இடத்தில் வைத்து மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை நம்பித் தான் பெற்றோர் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.

ஆனால், வேலிகளே பயிர்களை மேய்வதைப் போல குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது மன்னிக்கவே முடியாத குற்றம் ஆகும்.

இந்தக் குற்றத்தைச் செய்த ஆசிரியருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்காமல், நிதி வழங்கி சரி செய்து விடலாம் என்று ஒரு கும்பல் முயற்சி செய்திருப்பதையும், அதற்கு பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் துணை போயிருப்பதையும் பார்க்கும் போது திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் அநீதியும், குற்றவாளிகளைக் காப்பாற்றும் போக்கும் எந்த அளவுக்கு புரையோடிப்போயிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

திமுக அரசு வேடிக்கை பாரக்கிறது

இவை அனைத்தையும் திமுக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் வழங்காமல் கட்டப் பஞ்சாயத்து செய்வது தான் திமுகவின் நீதியா? என்பதை ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும். அவரின் தவறை மூடி மறைக்கும் வகையில் கட்டப் பஞ்சாயத்து செய்தவர்களும், அதற்கு துணை நின்ற கல்வித்துறை அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி பெற்றுத் தர பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தும்.” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in