வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் : அன்புமணி உறுதி!

Anbumani says will DMK Loose TN Assembly Election 2026 : “சமூக நீதி குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை” என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
PMK Leader Anbumani says will DMK Loose TN Assembly Election 2026 Upcoming in recent Madurai PMK Meeting News in Tamil
PMK Leader Anbumani says will DMK Loose TN Assembly Election 2026 Upcoming in recent Madurai PMK Meeting News in TamilGoogle
2 min read

மதுரையில் பாமக நிர்வாகிகள்

Anbumani says will DMK Loose TN Assembly Election 2026 : மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாமக தலைவர் அன்புமணி சென்னையிலிருந்து விமான மூலம் மதுரைக்கு வந்தடைந்தார். அவரை மதுரை விமான நிலையத்தில் பாமக பொருளாளர் திலகபாமா வன்னியர் சங்க துணைத் தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் சண்முகநாதன் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் வரவேற்றனர்.

அன்புமணி செய்தியாளர்கள் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி தமிழ்நாட்டில் அன்றாடம் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஒரு பக்கம் ஆசிரியர்கள், இளநிலை உதவிப் பேராசிரியர்கள், துப்புரவு பணியாளர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் போராடி வருகிறார்கள். இன்னொருபுறம், பெண்கள் மதுக்கடைகளுக்கு எதிராக போராடுகிறார்கள்.

இப்படி தமிழ்நாட்டில் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் திமுக அரசை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். திமுக மீது மிகுந்த கோபத்தில் மக்கள் இருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளில் 13% மட்டுமே நிறைவேற்றி இருக்கிறார்கள். இதனால் அனைவரும் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருக்கிறார்கள். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்பதில் மாற்ற கருத்தே இல்லை.

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான்

அதேபோல தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண் துறை வளர்ச்சி சொல்ல முடியாத அளவுக்கு சரிவில் உள்ளது. கடந்தாண்டு மைனஸ் 3.8 சதவீதம், இந்த ஆண்டு மைனஸ் 1.8 சதவீதம். எந்த ஆட்சியிலும் இப்படி இருந்தது இல்லை. விவசாயிகளின் பயிர் இழப்பீடு கடந்த ஆண்டு பாதிப்புக்கு இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை. தமிழகத்தில் நிர்வாகம் என்று எதுவும் இல்லை, முதல்வருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

ஆனால் கடனை மட்டும் அதிகமாக வாங்கி இருக்கிறார்கள் 9,55,000 கோடி ரூபாய் கடன். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான். ரூ. 62,000 கோடிக்கு வட்டி கட்டுகிறார்கள். அதன் பிறகு தான் உத்தரபிரதேசம் ஆனால் தமிழ்நாட்டின் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் மக்கள் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ளனர்.

சிபிஐ விசாரணை வரும் மாற்று கருத்தே இல்லை

வீடு கட்ட கடன் வாங்கலாம் அங்கு வாழ்வதற்கு கடன் வாங்கக் கூடாது. அதைத்தான் தமிழக அரசு செய்கிறது. பணத்தை வைத்து கொள்ளை அடிக்கிறார்கள். தமிழகத்தில் கட்டுமானமே இல்லை. மணல் கொள்ளை உட்பட அமலாக்கத் துறை பட்டியல் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு அதைப் பற்றி கவலைப்படாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கனிம வள கொள்ளை என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன்.

இதற்கெல்லாம் ‘காட்ஃபாதர்’ ஒருவர் தென் மாவட்டத்தில் இருக்கிறார். பெரிய பொறுப்பில் இருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலை நமக்கு ஒரு வரம். அந்த மலையை அழித்தொழித்து நாசப்படுத்த வேண்டும் என்று முடிவில் இருக்கிறார்கள். உறுதியாக சிபிஐ விசாரணை வரும் அதில் மாற்றுக் கருத்து இல்லை.

சமூக நீதி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியே இல்லை

சமூக நீதி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியே இல்லை. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 69% இட ஒதுக்கீடை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 365 சமுதாயங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பயன்பெறாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். இதையெல்லாம் கணக்கெடுப்பு நடத்தினால் மட்டும்தான் தெரியும். அதைக்கூட நடத்த மாட்டேன் என்று சொல்லும் முதல்வரை பார்த்திருக்கீங்களா. அவர் தான் ஸ்டாலின்.

ஸ்டாலின் அதிகாரம் இல்லை என்று பொய்சொல்கிறார்

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, பிஹார் என அனைத்து மாநிலங்களிலும் கணக்கெடுப்பு எடுத்துள்ளார்கள். அங்கு சமூக நீதியை நிலைநாட்டும் அரசுகள் உள்ளன. தமிழ்நாட்டில் சமூக அநீதி தான் உள்ளது. பெரியாரின் பெயரைச் சொல்ல தகுதி இல்லாதவர்கள்.

கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதன்படி மாநில அரசும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி திட்டங்களை கொடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பொய் சொல்கிறார். கணக்கெடுப்பு நடத்த என்ன பிரச்சினை. இவ்வளவு அநியாயம் நடந்து கொண்டிருக்கின்ற இந்த ஆட்சியில். தொழில் முதலீடு வந்து விட்டதாக பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்

தற்போது நான் அது தொடர்பான ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறேன். 34 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது, ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் கோடி முதல்வர் கிடைத்துள்ளது என்று பொய்யை முதல்வர் சொல்லி வந்தார். தற்போது புத்தகம் போட்டவுடன் வாயை திறக்கவில்லை. 8.8% தான் தொழில் முதலீடு வந்துள்ளது. ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடிக்கு தான் ஒப்புதல் கொடுத்துள்ளார்கள். இந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடையும். இவ்வாறு அன்புமணி கூறினார்.

தொடர்ந்துகூட்டணி குறித்த கேள்விக்கு, “விரைவில் எங்கள் கூட்டணியை அறிவிப்போம். பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும். இன்றைய நிலவரப்படி கூட்டணி பற்றி என்னால் பேச முடியாது. ஆனால், பெரிய கூட்டணி முடிவாகும்.” என்றார். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த கேள்விக்கு, “ஆன்மிகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது இதுதான் நிலைபாடு. நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in