
Poovulangin Nanbargal on TN Govt: பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் எக்ஸ் தள பதிவின் விபரம் :
2021ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சூழலியல் பார்வையில் மூன்று முக்கியமான குழுக்கள் அமைக்கப்பட்டன:-
1. டெல்டா மாவட்டங்களை முழுமையாக பாதுகாக்க, ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஹட்ரோகார்பன் கிணறுகள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை வெளிக் கொண்டு வர, பேரா. சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான குழு. இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.
2. சென்னையை நிரந்தரமாக வெள்ளம் மற்றும் வறட்சியில் இருந்து பாதுகாக்க, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு. இந்த குழு இறுதி அறிக்கை தாக்கல் செய்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
3. பரந்தூர் விமான நிலையத்திற்காக அரசு திட்டமிட்டுள்ள இடத்தில், 20க்கும் மேற்பட்ட நீர்நிலைகள், 7கிமீ தூரத்திற்கு கம்பன் கால்வாய் உள்ளன. இவற்றை அழித்தாலும்(😭), விமான நிலையத்திற்குள் எப்படி நீர்நிலைகளை அமைக்கலாம் என்பதனை ஆராய்ந்து ஆலோசனை சொல்ல, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையிலான குழுவை அரசு அமைத்தது.இந்த குழு அறிக்கை தாக்கல் செய்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்த மூன்று குழு அறிக்கைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிடாமல், அப்படியே வைத்திருக்கிறது. இந்த அறிக்கைகளில் அரசின் நடவடிக்கைகளுக்கு சிக்கலான விஷயங்கள் இருப்பதால்தான், அரசு இந்த அறிக்கைகளை வெளியிடாமல் வைத்துள்ளதா?
எந்த திட்டத்தையும் மூடி மறைத்து, மக்களை ஏமாற்றி, திட்டங்களை செயல்படுத்திவிடலாம் என அரசுகள் நினைத்தால், அவை தோல்வியையே சந்தித்துள்ளன என்பதற்கு வரலாற்றில் பல்வேறு உதாரணங்கள் உள்ளன.
முதல்வர் அவர்களே, மேற்சொன்ன அறிக்கைகளை வெளியிடுவதற்கு என்ன தயக்கம்? இந்த அறிக்கைகளை வெளியிட, பல சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றத்திலேயே கோரிக்கை வைத்துள்ளார்கள். இதுதான் நீங்கள் உத்தரவாதப்படுத்திய “வெளிப்படை தன்மையான” ஆட்சியா?
இவ்வாறு அந்தப்பதிவில் சுந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.