

கூட்டணி குழப்பத்தில் தேமுதிக மற்றும் பாமக
DMDK Alliance 2026 Announcement in Cuddalore DMDK Maanadu : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க திமுக, அதிமுக மற்றும் தவெக ஒரு பக்கம் போட்டி போட்டு வருகிறது.
இதில் யாருடன் கூட்டணி அமைப்பது என கடைசி வரை முடிவை அறிவிக்காமல் தேமுதிக மற்றும் பாமக குழப்பத்தை தொடர்ந்து வருகிறது.
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அந்த வகையில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக ஆலோசிப்பதற்காக தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களிடம் கருத்துக்களை கேட்டுள்ளோம்.
மாவட்ட செயலாளர்கள் சொல்வதை கேட்போம்
அதில் மாவட்ட செயலாளர்கள் தங்களுடைய கருத்துக்களை தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் எழுதி போட்டு உள்ளார்கள். எனவே மாவட்ட செயலாளர்களின் முடிவை பொறுத்து யாருடன் கூட்டணி என வரும் 9 தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்பேன் என தெரிவித்தார்.
முழு கவனமும் சட்டமன்ற தேர்தலை நோக்கி
மாவட்ட செயலாளர்களின் கருத்து தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்களின் கருத்தாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறிய அவர், இந்த தேர்தலில் தேமுதிக மகத்தான கூட்டணியை அமைக்கும் என தெரிவித்தவர், அதிமுகவில் ராஜ்ய சபா சீட் ஏற்கனவே பேசப்பட்டது, சொல்லப்பட்டது, அது ஒரு புறம் இருக்கட்டும்.
இப்போது நடைபெறுவது சட்டமன்ற தேர்தல், எனவே எங்களுடைய முழு கவனமும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி தான் இருக்கும் என தெரிவித்தார். எங்கள் கட்சி நிர்வாகிகள் யாருடன் விரும்புகிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமையும் என கூறினார்.
கூட்டணி அமையும் போது பதில் தெரியும்
கடலூர் மாநாட்டில் கூட்டணி முடிவு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுக்கு தோழமை கட்சிகள் தான். அனைவரும் தேமுதிக உடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்கள். வரவேற்கிறார்கள் உரிய நேரத்தில் சரியான முடிவை நாங்கள் எடுப்போம் என தெரிவித்தார்.
வரும் சட்டமன்றத் தேர்தல் மாறுபட்ட ஒரு தேர்தலாக இருக்கும். மக்கள் விரும்பிய ஒரு அணி நிச்சயம் வெற்றி பெறும். கூட்டணி கட்சிகளும் மந்திரி சபையில் அங்கம் வகிக்க வாய்ப்பு உள்ளது.
திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய வேண்டும் என்ற ஈ.பி.எஸ். அழைப்பு குறித்த கேள்விக்கு எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் அது எடப்பாடி பழனிசாமியின் கருத்து.யார் ஏற்றுக் கொள்கிறார்கள் யார் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கான விடை கூட்டணி அமையும் போது மக்களுக்கு தெரியும் என தெரிவித்தார்.
தேமுதிக மாநாட்டில் கூட்டணியை எதிர்நோக்கி நிர்வாகிகள்
திமுக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர் , மாவட்ட செயலாளர்கள் அவர்களது கருத்தை சொல்லி உள்ளார்கள். மாவட்ட செயலாளர்களின் கருத்தை வைத்து மாநாட்டில் எங்களது கூட்டணியை அறிவிப்போம் என பிரேமலதா பதிலளித்தார்.
முன்னதாக மாவட்ட செயலாளர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்தே பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே தேமுதிக மாநாட்டில் கூட்டணி தொடர்பான என்ன முடிவை பிரேமலதா அறிவிப்பார் என அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.