

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தமிழக அரசியலிலும் தேசிய அளவிலும் கவனம் பெற்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் 'கந்தனுக்கு அரோகரா' எனப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகப் பொறுப்பை கவனிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று மதுரை வந்தடைந்து, தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை முழுவதும் பாதுகாப்புப் பொறுப்பு CRPF வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்காக வந்துள்ள வீரர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, மலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தீபம் ஏற்றப்பட உள்ளதால் முருக பக்தர்கள் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.
மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காக தற்காலிக மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், களிமண், கோணிச் சாக்கு, சூடம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களும் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
இன்று மாலை 6 மணியளவில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், திருப்பரங்குன்றம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது .
====================