

தந்தை மகன் மோதலால் குழப்பம்
Ramadoss vs Anbumani Issue Case : பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. பாமக இரண்டாகப் பிளவுபட்டு கட்சியின் நிர்வாகிகள் ராமதாஸ், அன்புமணி என இரு தரப்பாகப் பிரிந்துள்ள நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் அன்புமணி. ராமதாஸ் தரப்பு இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமக சின்னம், கொடியை பயன்படுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது.
வழக்கு தாக்கல் செய்த அன்புமணி
இந்நிலையில், சட்டசபை தேர்தலும் நெருங்கி கொண்டிருக்கிறது, இதனை கருத்தில் கொண்டுஅன்புமணி தரப்பு தனியாகவும், ராமதாஸ் தரப்பு தனியாகவும் விருப்ப மனுக்களை பெற்றுள்ளது. இதுவரை 4,109 பேர் விருப்பமனு அளித்துள்ளனர் என ராமதாஸ் கூறியுள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் யார் தலைமையில் போட்டியிடுவது அதிகாரப்பூர்வ பாமக? சின்னம் யாரிடம் இருக்கும் என்ற குழப்பம் நிலவுகிறது. இதற்கிடையே ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஆதரவாக இருக்கிறது.
இதற்கு எதிராக ராமதாஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பாமக தங்களுக்கே சொந்தம், கட்சியில் தனக்கே முழு அதிகாரம் என்று உத்தரவிடக் கோரி ராமதாஸ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ரிட் மனுவில், பாமகவின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த அன்புமணி உள்ளிட்டோருக்குத் தடை விதிக்க வேண்டும், தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க ராமதாஸுக்கு அதிகாரம் என உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பு
இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், "என்னுடைய தலைமையில் நிர்வாகக் குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்து நிர்வாக குழு அலசி ஆராய்ந்து சில முடிவுகளை எடுத்துள்ளோம். டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்த கருத்தின்படியும், நீதிமன்ற தீர்ப்பின்படியும் அன்புமணி பாமக தலைவர் என்று சொல்ல முடியாது, சொல்லக்கூடாது.
பாமகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், பாமகவின் தலைவர் என்று அன்புமணி கூறி வருகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல். பாமகவின் தலைவர் நான் தான் என்று அன்புமணி கூறுவதை ஊடகங்கள் வெளிப்படுத்தக்கூடாது என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். டெல்லி நீதிமன்றம் தீர்ப்பின்படி பாமகவின் சின்னம், கொடி, பெயர் உள்ளிட்டவற்றை அன்புமணி உபயோகப்படுத்தக் கூடாது. அப்படி உபயோகப்படுத்தினால் அது நீதிமன்ற அவமதிப்பு செயல். பாமகவின் தலைவர் என அன்புமணி கூறுவதை ஊடகங்கள் அப்படியே போடுகிறீர்கள். அது எனக்கு வருத்தமாக உள்ளது. இனியாவது அப்படி செய்ய வேண்டாம் என்று உங்களை பாசத்தோடு கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்திருந்தார்.