

ஒருதலை காதலால் இளைஞனை கண்டித்த மாணவி பெற்றோர்கள்
Rameswaram 12th Girl Student Murder Case Update in Tamil : ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். மாரியப்பனுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் ஷாலினி. இவர் ராமேசுவரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
மாணவிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முனிராஜ் (21) என்ற வாலிபர் பள்ளி மாணவியை கடந்த சில நாட்களாக காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து மாணவி அவரது தந்தை மாரியப்பனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து முனிராஜ் வீட்டிற்கு சென்ற மாரியப்பன் இளைஞரை கண்டித்துள்ளார்.
மாணவி உயிரிழப்பு
இந்நிலையில், இன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவி ஷாலினியை வாலிபர் வழிமறித்து காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தி உள்ளார். ஆனால் மாணவியோ மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனை எதிர்பாராத மாணவி நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து முனியராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார்.
முனிராஜை கைது செய்து விசாரணை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துறைமுக போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு
மாணவியின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுத நிலையில், முனிராஜிற்கு தகுந்த தண்டனை வழங்கும் வரை மாணவியின் உடலை வாங்க மறுத்து, அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை முதல் இராமேஸ்வரம் வரை குற்ற செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், திமுகவின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.