

சென்னையில் தூய்மை பணிகள் :
சென்னை மாநகராட்சியின் 11 மண்டலங்களில், தனியார் நிறுவனங்கள் மூலமாக தூய்மை பணிகளானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 மண்டலங்களில், 11 மண்டலங்களுக்கு மட்டும்தான் இந்த நிலை. மீதமிருக்கும் 4 மண்டலங்களில் மாநகராட்சியின் ஒப்பந்த தொழிலாளர்களாக, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.
தனியாருக்கு தாரை வார்க்கும் திமுக :
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதலாக ராயபுரம், திருவிகநகர் ஆகிய 2 மண்டலங்களீன் தூய்மை பணிகளும் தனியார் வசம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தனியார்வசம் போனால், ஊதியமாக ரூ.16,950 மட்டுமே கிடைக்கும் என்கின்றனர் தூய்மை பணியாளர்கள். எனவே, தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிடக் கோரியும் தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 10வது நாளாக நீடிக்கிறது.
10வது நாளாக போராட்டம் :
தூய்மைப் பணியாளருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த 12 ஆயிரம் பேரை திடீரென பணி நீக்கும் செய்தது மிகவும் வேதனை அளிக்கிறது என தெரிவித்திருந்தார்.
திமுக அரசுக்கு என்ன வேலை? :
நகரை தூய்மையாக்கும் பணியை தனியாருக்கு அளிப்பதன் அவசியம் என்ன இருக்கிறது? பிறகு அரசுக்கு என்ன வேலை?, எல்லாமே தனியார் மயம் என்றால் அரசு இங்கே என்ன செய்கிறது என்ற கேள்வி பொதுவாக எழுகிறது. போக்குவரத்து, கல்வி, மருத்துவம், சாலை போடுதல், பராமரித்தல், மின் உற்பத்தி விநியோகம் என அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
டாஸ்மாக் மட்டும் அரசின் கையில் :
சாராயக்கடையை மட்டும் அரசு ஏற்று நடத்தும் என்பதை ஏற்றுக்கொள்கிறதா இந்த சமூகம். நாம் மூக்கை பிடித்துக் கொண்டு போடும் குப்பைகளை அவர்கள் மூழ்கி எடுத்து சுத்தம் செய்கிறார்கள். 12 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துள்ள தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதில் அரசுக்கு என்ன சங்கடம்?.
போதிய நிதி இல்லை என்பது ஒரு சாக்கு :
தமிழக அரசில் போதிய நிதி இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. மதுரையில் கலைஞர் கருணாநிதி பெயரில் ரூ.200 கோடியில் கட்டப்பட்ட நூலகத்தில் எத்தனை பேர் படித்துக் கொண்டிருக்கின்றனர். மகாபலிபுரத்தில் ரூ.540 கோடியில் கலையரங்கம் கட்டியது எதற்காக? தமிழ்நாட்டில் தேவையில்லாத தண்டச் செலவுகள் எவ்வளவு என சொல்லுங்கள்” இவ்வாறு சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
===========