

இயற்கை முறையில் விவசாயி சாகுபடி
Farmers Invented Weeding Machine in Sivagangai : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உலகம்பட்டியில் இயற்கை முறையில் சிக்கனமாக விவசாயம் செய்து வருபவர் இயற்கை விவசாயி சிவராமன். இவர் பல ஆண்டுகளாக 6 ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.
பாரம்பரிய நெல் ரகங்கள்
தற்பொழுது காட்டுயானம், இலுப்பைப்பூ சம்பா, சிவன் சம்பா, குளவாழை, ஆத்தூர் கிச்சடி சம்பா, செங்கல்பட்டு சிறுமணி, பர்மா கவுனி உள்ளிட்ட 12 பாரம்பரிய நெல் ரகத்தை இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளார்.
களையெடுக்கும் கருவியை உருவாக்கிய விவசாயி
இந்நிலையில் களையெடுக்க ஆட்கள் கிடைக்காததால், சிவராமன் ரூ.2,900-க்கு களையெடுக்கும் கருவியை உருவாக்கியுள்ளார். இக்கருவியில் 4 மீட்டர் இடைவெளியில் 2 குழாய்களை பொருத்தியுள்ளார்.
மேலும் கம்பிகளில் துளையிட்டு வயர்கள் மூலம் இரும்பு சங்கிலிகளை கட்டியுள்ளார். இதை இழுக்கும்போது களைகள் பறிக்கப்படுகின்றன. இதனை ஒருவரே கையாள முடியும்.
விவசாயி சிவராமன் விளக்கம்
இதன் மூலம் களையெடுக்கும் செலவு பெருமளவு குறைகிறது. இதுகுறித்து விவசாயி சிவராமன் நெற்பயிர் நடவுக்குப் பிறகு ஏற்படும் செலவுகளை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறேன்.
களையெடுக்க ஏக்கருக்கு ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை செலவாகிறது. ஆட்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதனால் களையெடுக்கும் கருவியை உருவாக்கினேன்.
2 கட்டங்களாக களை எடுக்கலாம்
இக்கருவியை பயன்படுத்தி, நடவு செய்த 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை முதல் கட்டமாகவும், 20 முதல் 40 நாட்கள் வரை 2-ம் கட்டமாகவும் களையெடுக்கலாம். இதனால் நெற்பயிருக்கு சேதம் ஏற்படாது.
மேலும்,எங்கள் பகுதியில் கிடைக்கும் பொருட்களை கொண்டு இயற்கை முறையில் ஜீவாமிர்தம், மீன்அமிலம் தயாரித்து பயிர் வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறேன்.
இயற்கை உரங்கள்
அதேபோல் நுண்ணுயிர், மண் வளம் பெருக்க பனம்பழ கரைசலை பயன்படுத்துகிறேன். பூக்கள் அதிகரிக்க தேன்மோர் கரைசல், இலை சாப்பிடும் பூச்சியை அழிக்க பத்தலை கரைசல், அஸ்வினிபேன், குருத்துப்பூச்சியை அழிக்க வேப்பங்கொட்டை கரைசல், மாவு பூச்சியை (கத்தாலை) அழிக்க கலனி கரைசலை பயன்படுத்துகிறேன். இதனால் சாகுபடி செலவு குறைகிறது. என்று அவர் கூறினார்.
இவரின் முயற்சியை அவ்வூர் கிராம விவசாயிகள் பலரும் பாராட்டி வரும் நிலையில், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
====