சமூகநீதி விடுதிகள் : ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அன்புமணி

சமூகநீதி விடுதிகள் பெயர் மாற்றத்தை விமர்சித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
anbumani ramadoss on social justice hostels
anbumani on social justice hostels
1 min read

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் 2,739 விடுதிகளும் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூக நீதி என்ற பெயரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பயன்படுத்துவதை விட பெரிய கொடுமையும், முரண்பாடும் இருக்க முடியாது.

வாழும் காலத்தில் ஒருவரை கொடுமைப்படுத்தி படுகொலை செய்து விட்டு, அவரது கல்லறையில் பெயரை பொறிப்பது எப்படியோ, அப்படித்தான் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் சமூகநீதியை ஒட்டுமொத்தமாக படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி என்று கூறிக் கொண்டிருக்கிறார்.திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் சமூகநீதியைக் காக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தியாவில் கர்நாடகம், பிகார், தெலுங்கானம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசுகளால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விட்ட நிலையில், இன்று வரை தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அந்த சமூகநீதிக் கடமையை தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1193 நாள்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதேபோல் சமூகநீதி கோரும் பிற சமூகங்களுக்கும் துரோகத்தை மட்டுமே பரிசாக அளித்து வருகிறது திமுக அரசு. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே... உங்களுக்கு ஒரு வேண்டுகோள்..சமூகநீதி என்பது மிகவும் புனிதமான சொல்..... அதை நீங்களும், உங்களைப் போன்றவர்களும் உச்சரித்து கொச்சைப்படுத்தாமல் இருங்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in