வேலைநிறுத்த போராட்டம் உறுதி : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்!

ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி 6-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
The strike is confirmed - Tamil Nadu Government Employees Association!
The strike is confirmed - Tamil Nadu Government Employees Association!google
3 min read

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

tamil nadu government employees association strike தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் வெளியிட்ட அறிக்கையில் தமிழக முதல்வர் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிப்பார் என ஆவலுடன் காத்திருந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பேரிடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் 2.0-ஐ அதாவது தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற புதிய அறிவிப்பை முதல்வர் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் நகலாக தமிழகம்

இந்த அறிவிப்பு மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் நகலாகத் தான் உள்ளது. மத்திய அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களில் 90% பேர் அத்திட்டத்தினை ஏற்கவில்லை என்பது தான் இன்றைய நிலை.

பழைய ஓய்வூதிய திட்டம் தேவை

பழைய ஓய்வூதியம் என்பது அரசு ஊழியரின் பங்களிப்பில்லாமல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமையாக இருந்தது. ஆனால், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் மீண்டும் ஊழியர்களிடம் 10% பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திலாவது அரசு பங்குத் தொகை 10% என இருந்தது.

அரசு ஊழியர்களை ஏமாற்ற வேண்டாம்

தற்போது ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் அரசே ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக ஓய்வூதியப் பலன்களை முறையாக வழங்காத அரசின் இந்த அறிவிப்பு இப்பட்டியலில் அரசு ஊழியர், ஆசிரியர்களையும் சேர்க்க முயற்சிப்பதாகவே நாங்கள் பார்க்கிறோம்.

ஓய்வூதியம் வேறு, பணிக்கொடை வேறு

இத்திட்டத்தில் பணியாளர் பங்களிப்புத் தொகை திரும்ப வழங்குவது (lum-sum) குறித்து எந்த ஒரு தகவலும் குறிப்பிடப்படவில்லை. இது ஓய்வு பெறும் நாளில் ஒரு பணியாளருக்கு மிகுந்த ஏமாற்றத்தை தரும்.

ஒரு அரசு ஊழியர் ஓய்வு பெறும் போது அவருக்கு பிள்ளைகளின் திருமணம், வீடு கட்டுதல், கடன் திரும்ப செலுத்துதல் போன்ற பல முக்கிய கடமைகள் இருக்கும்.

பணிக்கொடை எப்போது கிடைக்கும்

இவை அனைத்தையும் ஈடுகட்ட அவரது பங்களிப்பு சேமிப்பில் இருந்து திரும்ப வழங்குவது குறித்து இத்திட்டத்தில் உறுதி செய்யப்படவில்லை.

25 ஆண்டுகளாக ஊழியர்கள் வஞ்சிப்பு

அதற்கு மாற்றாக பணிக்கொடை வழங்க உள்ளோம் என அரசு தெரிவித்துள்ளது. உண்மையில் சொல்லவென்றால் கடந்த 23 ஆண்டுகளாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த அரசால் பணிக்கொடை வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டு வந்தனர். ஓய்வூதியச் சட்டம் வேறு, பணிக்கொடை சட்டம் என்பது வேறு.

அரசு கடமையில் இருந்து நழுவுகிறது

தேர்தலை மனதில் வைத்து ஊழியர்களைத் திருப்திப்படுத்துகிறோம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டமானது “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போன கதை போல” இருப்பதாகவே நாங்கள் பார்க்கிறோம்.

ஏமாற்றப் பார்க்கும் அரசு

20 ஆண்டு காலப் போராட்டம், முதல்வர் அறிவித்து விட்டார், பெற்றுக் கொண்டு பாராட்டுவதை விட்டு விட்டு விமர்சிக்கிறீர்களே என கேட்கலாம். உண்மையில் அரசு தன் கடமையிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக நழுவிக் கொண்டிருக்கிறது என்பதைத் தான் இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.

வீதியில் நிற்கும் ஊழியர்கள்

சிவப்புக் கொடி ஏந்தி ஊழியர் நலனுக்காகப் போராடி வந்தவர்கள் எல்லாம், வெள்ளைக் கொடியோடு கோட்டை, கொத்தளத்தில் நிற்பதால் தான் உழைப்பாளி மக்களும், பாட்டாளிகளும், ஏன் படித்த அரசு ஊழியர், ஆசிரியர்களும் இன்று வீதியில் நிற்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளோம்.

சவப்பெட்டியில் எதிர்காலம்

போராட்டத்தில் உணர்வோடு களத்தில் நிற்பவர்களின் வெற்றி என்பது சர்வ நிச்சயம் என்று எங்களுக்கு தொழிற் சங்க இலக்கணம் கற்பித்த ஆசான்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

சங்கத் தலைவர்கள் வெளியிட்டுள்ள நன்றி அறிவிப்பின் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்கால வாழ்வை சவப்பெட்டிக்குள் அடைத்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

ஜனவரி 6 முதல் வேலை நிறுத்தம்

இதைத்தொடர்ந்து, முதல்வரின் இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் 2025 ஜனவரி 19 முதல் 30 வரை ஊழியர் சந்திப்பு பிரச்சார இயக்கத்தையும், 31-ஆம் தேதி சென்னை வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டையும், 10.02.2025 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தையும் அறிவித்திருந்தோம்.

ஆனால் பேரமைப்புகள் என்று தங்களை அறிவித்துக் கொண்ட அமைப்புகள் எல்லாம் ஜனவரி-6-இல் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், ஊழியர் நலன் கருதி எங்களது போராட்டத்தை ஜனவரி-6-ஆம் தேதிக்கு அறிவித்தோம்.

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் அறிவித்த முக்கியமான போராட்டங்களை எல்லாம் ஒத்தி வைத்த ஜாக்டோ-ஜியோ இன்றும் அதே நிலையை எடுத்திருப்பது எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.

வாக்களித்தவாறு அரசு பழைய ஓய்வூதியத்தை அறிவிக்கவில்லை. சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர், காசநோய் பிரிவு ஊழியர், தூய்மைப்பணியாளர் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் கோரிக்கைகள் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.

எங்களுக்கு வாக்களிக்காதவர்கள் ஐய்யோ இவருக்கு வாக்களிக்காமல் போய்விட்டோமே என கவலைப்படும் அளவில் எனது ஆட்சி அமையும் என தெரிவித்திருந்தார்.

வேதனைப்படும் அளவில் திமுக ஆட்சி

ஆனால் ஆட்சி அமைந்து நான்கரை ஆண்டுகள் கடந்த நிலையில் திமுக ஆட்சி அமைய கடுமையாக உழைத்து வாக்களித்ததோடு, தெருத்தெருவாக வாக்குப் பிச்சை எடுத்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்த, வாக்களித்த அரசு ஊழியர், ஆசிரியர்களே ஏன்டா இவர்களுக்கு வாக்களித்தோம் என வேதனைப்படும் அளவில் தான் இவர்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை வேதனையுடன் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம் என்று பதிவிட்டுள்ளனர்.

“படித்தவன் சூதும் வாதும் செய்தால், போவான், போவான் ஐயோவென்று போவான்” என்றும், அதே போல் “பாதகம் செய்வோரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா, மோதி, மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா” என்று எங்கள் பாட்டன் பாரதி எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான்.

எனவே திட்டமிட்டபடி நாங்கள் அறிவித்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் ஜனவரி 6 முதல் தொடங்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசு ஊழியர்களின் உண்மை மனநிலையைப் புரிந்து கொண்டு பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட நிலுவைக் கோரிக்கைகள் தொடர்பாக குறிப்பாக கிராம உதவியாளர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

===================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in