

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்:
Senior BJP leader Tamilisai Soundararajan on CM Stalin Speech : தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய்வதற்காக குழு அமைக்கப்பட்டு இருந்தது.
ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழு அறிக்கையின் முதல் பகுதியை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் உரை:
இதையடுத்து சட்டப் பேரவையில் உரையாற்றிய முதல்வர், மாநில உரிமைகளை வழங்கும் மத்திய அரசு அமையவில்லை என்றும் இருக்கின்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டு தான் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், உள்கட்டமைப்பில் முன்னேறி வருகிறோம் என்றும் கூறினார்.
மேலும், நில உரிமை, நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைக்கு இன்னும் கடுமையாக போராடும் சூழல் தான் உள்ளது என்றும் பேசினார்.
மேலும் படிக்க:”மாநிலங்கள் கையில் அதிகாரம்”, அரசியலமைப்பில் திருத்தம் : சட்டசபையில் குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
மாநில அரசின் மீது குற்றச்சாட்டு:
இதையடுத்து கூட்டாட்சிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும். தற்போது அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் வைத்துள்ள மத்திய அரசு, மாநில அரசுகளை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மாநில சுயாட்சி அவசியமா?
மாநில சுயாட்சி அவசியம் என்று கூறிய முதல்வரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,
உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத முதல்வர்:
”ஓராண்டு காலமாக 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளாட்சிகளுக்கான உரிமையை பறித்து மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் அதிகாரிகளை வைத்து நிர்வாகம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாநில சுயாட்சியை பற்றி பேசுகிறார்.
உள்ளாட்சிக்கு உரிமை கொடுக்க முடியாதவர்:
தான் ஆளும் தமிழ்நாட்டில் மாநிலத்திற்கு உள்ளாக உள்ள முறையான அதிகார பகிர்வை அதாவது உள்ளாட்சிகளுக்கு உரிமை கொடுக்க முடியாதவர்.
எல்லா மாநிலங்களுக்கும் சமமாக தனது நிர்வாகத்தை எந்த பாராபட்சமும் இல்லாமல் நடத்திக் கொண்டிருக்கும் மத்திய அரசை பார்த்து குறை கூறிக் கொண்டிருக்கிறார்.
வளர்ச்சியை சொல்லி வாக்கு கேட்க முடியாத திமுக:
தேர்தலில் வளர்ச்சி சொல்லி வாக்கு கேட்க முடியாத திராவிட முன்னேற்ற கழகம் மாநில சுயாட்சி என்று முதலில் கோரிக்கை வைத்து பின்பு தாங்கள் மத்தியில் ஆட்சியில் வரும்பொழுது அதை எல்லாம் மறந்து இன்று மறுபடியும் தோல்வி பயம் வரும் பொழுது இதைப் போன்ற கோரிக்கைகளை கையில் எடுக்கிறார்கள்.
திமுகவின் தோல்வி பயத்தையே இது காண்பிக்கிறது ” என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தனது சமூக வலை தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.