

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலுரை வழங்க முதல்வர் விஜய் நன்றாகத் தயாராகி வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்டம் - ஒழுங்கு புகார்
த.வெ.க. கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளையும் புகார்களையும் பட்டியலிட்ட உதயநிதி ஸ்டாலின், அவர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சட்டம் - ஒழுங்கு தோல்வி
"திமுக ஆட்சியில் குற்றச் சம்பவங்கள் நடந்தபோது, 'சாரி வேண்டாம், நீதிதான் வேண்டும்' என்று அப்போது முதல்வர் தெரிவித்தார். ஆனால், தவெக ஆட்சியில் சாரியும் கிடைக்கவில்லை, நீதியும் கிடைக்கவில்லை" என்று அவர் விமர்சித்தார்.
குற்றப் புள்ளிவிவரங்கள்
தவெகவின் 116 நாட்கள் ஆட்சியில் 200 கொலைகள், 300 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 550 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்றும், சட்டம் - ஒழுங்கும் உளவுத்துறையும் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
பேரவையில் கேள்விக்கணைகள்
மாணவர்களின் போராட்டத்திற்கு அஞ்சி கடற்கரையை மூடிய ஒரே அரசு இந்த அரசுதான் என்று சாடிய அவர், நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
பேரணிக்கு அனுமதி மறுப்பு
தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவராக வைத்துக்கொண்டு திராவிட கழகத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்தது ஏன் என்றும் வினவினார்.
அமைச்சர்களின் பதில்கள் குறித்து விமர்சனம்
"நாடகத்தில் இவருக்குப் பதில் இவர் வருவது போன்று, ஒரு துறை சார்ந்து கேள்வி கேட்டால் வேறு துறை அமைச்சர் பதிலளிக்கிறார். முதல்வரின் கைகளில்தான் காவலத்துறை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது" எனக் குறிப்பிட்டார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
"நான் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முதல்வர் நன்றாகத் தயாராகி, திங்கள்கிழமை பதிலுரை வழங்க வேண்டும்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
பேரவைத் தலைவரின் பதில்
எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்குப் பிறகு பேசிய பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், "முதல்வர் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பேரவையில் அமர்ந்து நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் கூர்ந்து கவனித்து வருகிறார். திங்கள்கிழமை அவர் கண்டிப்பாகப் பதிலளிப்பார்" என்று தெரிவித்தார்.
முதல்வர் விஜய் பதில்
இதனிடையே எழுந்து பேசிய முதல்வர் விஜய் அனைவரின் கேள்விகளையும் கவனித்து கொண்டு தான் இருக்கிறேன். அவையில் இல்லை என்றாலும் அனைத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அதனால் தங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதில் வழங்குவேன் என்றார்.
மேலும் சபாநாயகரிடம், எனக்கு ஒரே ஒரு சத்தியம் மட்டும் செய்து தர வேண்டும். நான் பதிலளிக்கும் போது எதிர்க்கட்சியினர் ஓடிவிடக்கூடாது என்றுவிட்டு அவையில் இருந்து வெளியேறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதிலடி
முதல்வரின் இந்த பேச்சைத் தொடர்ந்து அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், யாரும் ஓடாதீர்கள் என்றுவிட்டு கூறிவிட்டு முதல்வர் ஓடிவிட்டார் என்றார். இதனால் அவையில் கூச்சல் நீடித்தது.
=====