

நம்பெருமாள் செட்டியார்
Namperumal Chettiar History in Tamil : நம்மில் பலர் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப அவரவர் பொருளாதார வசதிக்கேற்றவாறு சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார்,என பல வாகனங்களை வைத்திருக்கிறோம். சில பெரும் பணக்காரர்கள் சொந்தமாக கப்பல், விமானம் முதலானவற்றை சொந்தமாக பயன்படுத்துகிறார்கள்.
சொந்தமாக ரயில் வைத்திருந்தார்
ஆனால் ஒரு மனிதர் ஒரு ரயிலை தன் சொந்த உபயோகத்திற்காக வைத்திருந்தார். அதுவும் நமது சென்னையில் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். அப்படி வைத்திருந்தவர் தான் நம்பெருமாள் செட்டியார்,
சென்னையில் பல கட்டடங்களை கட்டியவர்
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பெருமாள் செட்டியார் அக்காலத்தில் ஒரு பெரிய கட்டுமான ஒப்பந்தக்காரராக இருந்தவர். கி.பி.1856 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த நம்பெருமாள் செட்டியார் சென்னையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல கட்டடங்களைக் கட்டிய பெருமைக்கான அங்கீகாரம் இவரையே சாரும்.
சென்னையின் சிவப்பு நிற பில்டிங்
இவர் கட்டிய கட்டடங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் அமைந்திருந்தன. சென்னை சட்டக்கல்லூரி, பேங்க் ஆஃப் மெட்ராஸ், விக்டோரியா நினைவு மண்டபம், எழும்பூர் அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம், எழும்பூர் சிற்பக்கலைக் கல்லூரி முதலான பல பிரம்மாண்டமான கட்டடங்களைக் கட்டியவர் நம்பெருமாள் செட்டியார். இதுமட்டுமின்றி ஆங்கிலேயர்கள் பலருக்கு குடியிருப்புகளையும் கட்டிக் கொடுத்துள்ளார்.
விலையுயர்ந்த்த காரை வாங்கிய முதல் இந்தியர்
சென்னை சேத்துப்பட்டில், வெள்ளை மாளிகை என்ற பெயர் கொண்ட, மூன்று மாடிகளும் முப்பது அறைகளும் கொண்ட ஒரு பங்களாவில் வாழ்ந்தவர். இந்த பங்களா தற்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் பலநாட்டு கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவருக்கு இப்பகுதியில் சொந்தமாக பல வீடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டிலிருந்து விலை உயர்ந்த காரை வாங்கிய முதல் இந்தியராகவும் இவர் கருதப்படுகிறார். மேலும், தனது சொந்த உபயோகத்திற்காக ஒரு ரயிலை வாங்கியவர் என்ற பெயரும் இவருக்கும் இன்றளவும் இருந்து வருகிறது.
ராமானுஜரை பார்த்துகொண்ட நம்பெருமாள்
நம்பெருமாள் இயக்குநராக பணியாற்றிய திருச்சூர் டிம்பர் அண்ட் சா மில்ஸ் நிறுவனம் பம்பாய் மற்றும் கொல்கத்தா மற்றும் பல வெளிநாடுகளுக்கும் மரங்களை ஏற்றுமதி செய்து வந்தது. பர்மா இரங்கூன் முதலிய வெளிநாடுகளிலிருந்து தேக்கு மரங்களை இறக்குமதி செய்து பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வந்தார். நம்பெருமாள் செட்டியார் கணிதமேதை இராமானுஜனின் இறுதிக்காலத்தில் அவரைத் தன் பங்களாவில் வைத்து சிறப்பாக கவனித்துக் கொண்டார்.
ராமானுஜரின் இறுதிசடங்கு் இவர் செய்ததே
இராமானுஜனுக்கு காசநோய் இருந்ததால் அவருடைய உறவினர்கள் திருவல்லிக்கேணி வீட்டில் அவரை வைத்து பார்த்துக் கொள்ள பயந்த காரணத்தினால் நம்பெருமாள் செட்டியார் தனது பங்களாவில் தங்க வைத்து அவருக்கு சிறப்பான மருத்துவ வசதிகளையும் உணவு முதலான பிற வசதிகளையும் செய்து கொடுத்தார் என்பதும், அவர் காலமானதும் நம்பெருமாள் செட்டியாரே இராமானுஜனின் இறுதிச் சடங்குகளை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பட்டங்களை வாங்கிய நம்பெருமாள்
ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இவருடைய சாதனைகளைக் கருத்தில் கொண்டு நம்பெருமாளுக்கு ராவ் சாகிப், ராவ் பகதூர் மற்றும் திவான் பகதூர் முதலான பட்டங்களை வழங்கியுள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்ற நம்பெருமாள் தனது வருமானத்தில் கணிசமான பணத்தினை ஏழைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவ வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார்.
கோயில் திருப்பணிகள் பலவும் செய்துள்ளார். இப்படி பல்வேறு விசயங்களை தனியாளாக செய்து சும்பட வாழ்ந்து காட்டிய நம்பெருமாள் 1925 ஆம் ஆண்டில் காலமானார்.