திருப்பரங்குன்றம் தீப விவகாரம் : தமிழக அரசுக்கு பாஜக, அதிமுக எதிர்ப்பு; காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக வரவேற்பு!

தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி கண்டனம்; மதநல்லிணக்கத்தைப் பாதுகாத்ததாக தவெக அரசுக்கு கூட்டணிக் கட்சிகள் பாராட்டு...
Thiruparankundram Deepam Issue: EPS Warns of Contempt Case; Congress and Left Parties Back TN Government
Thiruparankundram Deepam Issue: EPS Warns of Contempt Case; Congress and Left Parties Back TN GovernmentGoogle
2 min read

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் :

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், வழக்கமான மரபின்படி தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜக, அதிமுக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மாவட்ட ஆட்சியரே முதல் குற்றவாளி நயினார் நாகேந்திரன் :

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், உயர் நீதிமன்றத்தில் உரிய ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்துவிட்டு, தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றி, சிறுவர்களுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை தமிழக அரசு ஏமாற்றியுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் என்பவர் மாவட்ட மாஜிஸ்திரேட் என்றும், முதலமைச்சர் சொல்வதை அவர் கட்டாயம் கேட்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசுக்கு காங்கிரஸ் பாராட்டு :

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில், வகுப்புவாத சக்திகளின் சதிகளை முறியடித்து, எவ்வித சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் பாதுகாத்த தமிழக மக்களுக்கும் அரசுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களின் விழிப்புணர்வும் ஒற்றுமையும் காரணமாக வகுப்புவாத சக்திகளின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அரசு சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி :

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் குறித்து பேசுகையில், எந்த அரசாங்கமாக இருந்தாலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது கட்டாயக் கடமை என்று தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்டால், அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தமிழக அரசு பின்பற்றியிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு :

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு அழுத்தங்களுக்கும் மதவாத, வகுப்புவாத சக்திகளின் மிரட்டல்களுக்கும் அடிபணியாமல் தவெக அரசு உறுதியுடன் செயல்பட்டு வழக்கமான முறையில் கார்த்திகை தீபத்தை ஏற்றியது பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

சட்டம் - ஒழுங்கு, மதநல்லிணக்கம் மற்றும் மக்கள் ஒற்றுமையைப் பாதுகாப்பதில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழக அரசு, முதலமைச்சர், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழர் மரபையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாத்த அரசு - விசிக :

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில், வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றிய மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும், தமிழர் மரபையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதில் உறுதியுடன் செயல்பட்ட தவெக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

=======================