

TN Ration Tur Dal Procurement Price Reduced Rs 187 Crore Saved
தமிழக ரேஷன் கடைகளுக்கான துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 குறைத்து அரசுக்கு ரூ.187.56 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடை துவரம் பருப்பு கொள்முதல்
தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பைக், கடந்த காலங்களில் கொள்முதல் செய்த விலையை விட குறைவான விலையில் கொள்முதல் செய்து முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ரூ.187.56 கோடி மிச்சம் பிடித்திருப்பதாக நுகர்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமையுடன் துவரம் பருப்பும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொள்முதல் விலை ஒப்பீடு
கடந்த காலங்களில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் போது ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.109.15-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால், புதிதாக அமைந்துள்ள தவெக அரசு ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.77.89-க்கு கொள்முதல் செய்துள்ளது. தற்போதைய அரசால் முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் கிலோவுக்கு ரூ.31 குறைவாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.187 கோடி நிதி சேமிப்பு
இதன் மூலம் கடந்த மூன்று மாத காலத்தில் அரசுக்கு செலவுத் தொகையில் ரூ.187.56 கோடி மிச்சமாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் துவரம் பருப்பு கொள்முதலுக்கு திமுக ஆட்சியில் ரூ.654 கோடி செலவிடப்பட்டது. ஆனால் தவெக ஆட்சியில் ரூ.467 கோடி மட்டுமே செலவிடப்பட்டு, ரூ.187.56 கோடி மிச்சம் பிடிக்கப்பட்டுள்ளது.
தரமான கொள்முதல் உறுதி
ரேஷன் கடைகளுக்கு வழங்க மொத்தம் 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் விலை குறைந்தாலும் பருப்பின் தரத்தில் எவ்வித குறையும் இல்லை என்று நுகர்பொருள் வழங்கல் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ”12 ஆவணங்களில் ஒன்று போதும்” : மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : வாக்காளர்கள் ஈசியா வாக்களிக்க EC அறிவுரை..!
===========