

TN Registration Department STAR 3 0 E-Hub Protest
பத்திரப் பதிவுத் துறை வருவாய், பின்னணி
தமிழ்நாடு அரசின் கருவூலத்திற்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும் முக்கியமான துறைகளில் பத்திரப் பதிவுத் துறையும் ஒன்று. இத்துறை மூலம் ஆண்டுதோறும் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது
பொதுவாக, சொத்து சார்ந்த ஆவணங்களை முறைப்படி எழுதி, சார்பதிவாளர் முன்னிலையில் பதிவு செய்யும் பணிக்கு உரிமம் பெற்ற பத்திர எழுத்தாளர்களையே பொதுமக்கள் நாடுவது வழக்கம்.
கடந்த 1998-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய தேர்வு எதுவும் நடத்தப்படாத நிலையில், பல தசாப்தங்களாக இத்துறையில் அனுபவம் வாய்ந்த நபர்களே பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், பத்திரம் பதிவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்க டிஜிட்டல் மாற்றங்கள் செய்யப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
'ஸ்டார் 3.0' மற்றும் 'இ-ஹப்' புதிய வசதி
இதனிடையே பத்திரப் பதிவுத்துறையில் ‘ஸ்டார் 3.0’ என்ற மேம்படுத்தப்பட்ட திட்டத்தின்கீழ் ‘இ-ஹப்’ (E-Hub) என்ற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியின்படி:
ஒரே இடத்தில் அதிநவீன வசதிகளுடன் அனைத்து வகையான பத்திரப்பதிவு சேவைகளையும் பொதுமக்களுக்குத் தடையின்றி வழங்கச் சேவை மையங்கள் அதாவது இ-சேவை மையம் போன்று ஏற்படுத்தப்பட உள்ளன.
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சார்பதிவாளர் அலுவலகத்துக்கு செல்லாமலேயே பத்திரங்களைப் பதியலாம்.
ஒரு மாவட்டத்தில் உள்ள சொத்துகளை எங்கிருந்தாலும், உரிய ஆவணங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம்.
அதிவேக வை-பை, டிஜிட்டல் டோக்கன் என பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.
சேவை கட்டணமாக ரூ. 2 ஆயிரமும், தட்கல் திட்டத்தில் ரூ. 5 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு டெண்டர், எழுத்தாளர்கள் எதிர்ப்பு
முதல்கட்டமாக இத்திட்டத்தை சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அமல்படுத்தவும், அதன்பின் பிற மாவட்டங்களில் செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான டெண்டர் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது.
இதற்குப் பத்திர எழுத்தாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இ-ஹப் திட்டம் அமலுக்கு வரும்போது, பத்திரம் எழுதும் ஒப்பந்தப் பணியைச் சாதாரண பத்திர எழுத்தாளர்கள் பெருந்தொகை கொடுத்து ஏலம் எடுக்க முடியாது; கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் அதைச் செய்ய முடியும்.
லட்சக்கணக்கானோர் பாதிப்பு
பல ஆண்டுகள் அனுபவம் உள்ள பத்திர எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், பத்திர நகல் எழுதும் அலுவலகப் பணியாளர்கள், பத்திரம் மற்றும் ஸ்டாம்ப் விற்பனையாளர்கள் என லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு கூடுதல் செலவு
பணியைத் தனியாருக்கு மாற்றும்போது பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது என்றும், பத்திரம் எழுதுவதற்கு ஆகும் செலவு அதிகமாகி பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
பணி புறக்கணிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம்
அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6-ந்தேதி முதல் தமிழ்நாடு பத்திர நகல் எழுத்தாளர் மாநில சங்கத்தினர் கவனஈர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.
பத்திரம் தயாரிக்கும் பணியைத் தனியாரிடம் ஒப்படைக்கும் டெண்டரைத் தமிழக அரசு திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி, 2-வது நாளாகப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் சார்பதிவாளர் அலுவலகம் முன் மாவட்டத் தலைவர் சஞ்சீவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காகிதம் இல்லாத மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வரத் தேவையற்ற பதிவு நடைமுற உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஸ்டார் 3.0 திட்டம் மற்றும் துறையைத் தனியார்மயமாக்கும் திட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
=============