

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகிய நான்கு பேர் மீதும் தகுதி நீக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகார்கள் தொடர்பாக இன்று (நவம்பர் 10) சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விசாரணையைத் தொடங்கினார்.
இரு தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அக்டோபர் 13-ம் தேதி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், நிலுவையில் உள்ள தகுதி நீக்கப் புகார்கள் மீதான விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
அதன்படி நவம்பர் 10 முதல் 12-ம் தேதி வரை குறுக்கு விசாரணை நடைபெறுகிறது. தொடர்ந்து நவம்பர் 17-ம் தேதி இறுதி வாதங்கள் நடைபெற உள்ளன.
அதன் பிறகு சபாநாயகர் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
கட்சியின் கொறடா உத்தரவை மீறி நான்கு எம்.எல்.ஏ-க்களும் தவெகவில் இணைந்துள்ளதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அதிமுகவின் கோரிக்கையாக உள்ளது.
இந்த புகார் தொடர்பாக இரு தரப்பு வாதங்களும் விசாரணையில் முன்வைக்கப்பட உள்ளன.
நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிக்க வேண்டியிருப்பதால், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் முடிந்த பிறகு, நான்கு எம்.எல்.ஏ-க்களின் பதவியைத் தொடர அனுமதிப்பதா அல்லது தகுதி நீக்க நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து சபாநாயகர் முடிவெடுப்பார்.
===================