விஜய் எக்ஸ் பதிவு
TVK Vijay Erode Meeting Update in Tamil : என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.எப்போதும், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள். நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும் ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன். இந்த உத்வேகமே எனக்கு எப்போதும் மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கிறது.
எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை ஆண்டுக்காலம் நம்மை ஆண்டாலும், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள என் அன்புக்கு உரியவர்களாகிய உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது. எனவே தான், வளர்த்து ஆளாக்கிய உங்களோடு இணைந்து உங்களுக்காக உழைக்கவே நாம் நம் அரசியல் பயணத்தைத் தொடங்கினோம்.
அந்தப் பயணத்தில், உங்களைச் சந்திப்பதற்கு நாம் புறப்பட்டதில் இருந்தே எவ்வளவோ தடைகள் தொடர்ந்து நமக்கு வந்தவண்ணம் இருந்தன. அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவை பல. உங்களுக்குத் தெரியாதவை பல. ஆனால், அவற்றையெல்லாம் உங்களின் பேராதரவு மற்றும் தூய அன்பின் துணையோடு முறியடித்து வெற்றி அடைந்து வருகிறோம். உங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம்.
ஈரோடு பரப்புரை கூட்டம்
அந்த வகையில் இன்று மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பானது, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பில், அளப்பரிய அன்பும் ஆதரவும் அளித்த, என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
கழக உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கும் நன்றி
இந்த நெகிழ்ச்சிமிகு சந்திப்பை, மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பாதுகாப்புடனும் மெச்சத் தகுந்த வகையிலும் ஏற்பாடு செய்திருந்த நம் கழகத்தின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த நம் கழகப் பொதுச் செயலாளர் திரு. ஆனந்த் அவர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.பாலாஜி B.Com, ஈரோடு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.வெங்கடேஷ் B.E., MBA, ஈரோடு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. A.பிரதீப்குமார் DCE ஆகியோருக்கும் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த காவல் துறைக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் சந்திப்போம், வெற்றி நிச்சயம் என்று பதிவிட்டுள்ளார்.