
மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞர் கவின் என்பவர், கடந்த 27-ஆம் தேதி நெல்லை அருகே பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாகரீக சமூகத்தில் இதுபோன்ற ஆணவப் படுகொலை சம்பவம் நடைபெறுவது அனைவரையும் வெட்கி தலைகுனிய செய்கிறது. சுர்ஜித் என்பவர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படவில்லை.
சுர்ஜித்தின் பெற்றோர் இருவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும், அவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் இருவரும் காவல்துறை உதவி ஆய்வாளர்களாக உள்ள நிலையில் சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்க முடியும் எனக் கூறி, அரசு அறிவித்துள்ள நிதியை கூட வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடக்கம் முதலே தமிழக அரசும், காவல்துறையினரும் தகவல்களை மூடி முறைப்பதிலும், குற்றவாளிகளை காப்பாற்றுவதிலுமே குறியாக இருக்கின்றனர். தமிழகத்தில் பட்டியலின மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டியலின மக்கள் படும் துன்பம் ஒன்றல்ல... இரண்டல்ல...
பட்டியலின மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் போக்குடன் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பட்டியலின மக்கள் தொடர்புடைய அனைத்து வழக்குகளிலும் திமுக அரசு, ஓரவஞ்சனையுடன் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், இன்று வரை உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் புகார் கொடுத்த பட்டியலின மக்கள் மீதே திமுக அரசு வழக்கு பதிவு செய்து கொடுமை இழைத்தது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் பட்டியலின மக்கள் பாதிக்கப்பட்டது தொடர்பான நூற்றுக்கணக்கான வழக்குகள் முறையாக விசாரிக்கப்படாமல் தூங்குகின்றன. காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதுபற்றி எந்த அக்கறையும் இல்லை.
தமிழ்நாடு முழுவதும் 445 கிராமங்களில் தீண்டாமை கொடுமை நிலவுவதாக ஓராண்டுக்கு முன்பு வெளியாகிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பல பகுதிகளில் தீண்டாமை கொடுமை, இரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடு, கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் தொடர்கிறது. ஆனால் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. திமுகவின் திருட்டு திராவிட மாடல் ஆட்சியில் தான், உலகின் எந்த பகுதியிலும் காண முடியாத அளவுக்கு பட்டியலின மக்களுக்கு மாபெரும் சமூக அநீதி இழைக்கப்படுகிறது.
எனவே, கவின் ஆணவப் படுகொலை வழக்கில் தமிழக காவல் துறையினர் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டுமென திமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.