
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் 'தேசத்தை கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை' என்ற தலைப்பிலான கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினாராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு பேசியதாவது : பஹல்காமில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி, நாட்டிற்கு சவால் விடுத்தனர். அமைதியை விரும்பும் நாடு இந்தியா. ஒருபோதும் எல்லை விரிவாக்கத்தில் ஈடுபடாத நாடு, இந்த கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளானது.
'பயங்கரவாதத்திற்கு நாங்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள்' என்று பிரதமர் தேசத்திற்கு உறுதியளித்து, அதற்கு தகுந்த பதிலடியும் கொடுத்தார். ஜெய்ஷ் -இ -முகமது மற்றும் லஷ்கர் -இ -தொய்பாவின் தலைமையகம் துல்லிய தாக்குதலால் பேரழிவு தரும் வகையில் இடிக்கப்பட்டது. இது ஒரு வித்தியாசமான பாரதம் என்பதற்கான சான்றுகள் முழு உலகிற்கும் உணர்த்தப்பட்டன.
போர் ஒரு தீர்வல்ல என்பதையும் பிரதமர் மோடி சூசகமாக கூறி உள்ளார். எந்தவொரு முன்னேற்றத்திற்கும், அமைதி ஒரு அத்தியாவசிய அம்சமாகும். அமைதி வலிமையான நிலையில் இருந்து வருகிறது. அமைதிக்கான சிறந்த உத்தரவாதம், முதலில் தேசம் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும் போது வருகிறது. நாம் நம் தேசியவாதத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டும். தேசியவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு பிரச்னைகள், அரசியல் கட்சிகள் மற்றும் நலன்களுக்கு அப்பாற்பட்டவை.
இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசினார்.