

குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சாதனை :
திருநெல்வேலி மாவட்டம் வெள்ளங்குளியை சேர்ந்தவர் நெசவாளர் ராம்குமார் (49). இவரது மனைவி மங்கையர்திலகம். இவர்களுக்கு வெங்கட் ஸ்ரீ, அருண், தரண் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்
பொருளாதார சிரமங்களுக்கு இடையிலும் ராம்குமார் தனது மூன்று மகன்களையும் வெள்ளங்குளி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்க வைத்துள்ளார்.
மூத்த மகன் வெங்கட் ஸ்ரீ, 2022-23ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று நீட் தேர்வில் 300 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையில் 2025ஆம் ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதி 420 மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி 440 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
7.5% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ இடம் :
இதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் மூன்று பேருக்கும் மருத்துவ படிப்புகளில் இடம் கிடைத்தது.
வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவ கல்லூரியிலும், அருணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியிலும், தரணுக்கு கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் :
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்களும் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரிகளில் இடம் பிடித்திருப்பது வெள்ளங்குளி பகுதி மக்களிடையே பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
ஒரு மகனின் மருத்துவ கனவை நனவாக்க வேண்டும் என்ற பெற்றோரின் ஆசை தற்போது மூன்று மகன்களும் மருத்துவ துறையில் பயிலும் வாய்ப்பாக மாறியுள்ளது. மூன்று மகன்களின் மருத்துவ கனவும் நனவாகியிருப்பது தங்களுக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாக பெற்றோர் தெரிவித்தனர்.