
Writer Magudeswaran on Kavignar Vairamuthu : கவிஞர் மகுடேசுவரன் முகநூல் பதிவின் விவரம் வருமாறு: தமிழில் பிழையாக எழுதுகின்றோரைப் பற்றி வைரமுத்து தம் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அந்தப் பதிவிலேயே அன்னார் சில பிழைகளைச் செய்திருக்கிறார் என்பது அவர்க்குத் தெரியப்படுத்தப்படவேண்டும். இன்னும் சொல்லப் போனால் வைரமுத்து எழுதும் உரையிலும் கவிதையிலும் பிழைகள் பல உண்டு. அவை தமிழாய்ந்த பெருமக்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும்.
அ). ‘ஊறுகாய் என்பதனை ஊறுக்காய் என்றெழுதுகிறார்கள்’ என்றெழுதுகிறார்கள் என்கிறார். வினைத்தொகையில் வல்லெழுத்து தோன்றல் இல்லை என்பதனை அனைவரும் அறிவர். ஆனால், வினைத்தொகையில் பிழைபட எழுதுமிடங்கள் அவர்க்குத் தெரியவில்லை. ஊறுகாயை யாரும் ஊறுக்காய் என்று எழுதுவதில்லை. இவ்வெடுத்துக்காட்டே தவறு. புனைபெயர் என்பதனைப் புனைப்பெயர் என்று எழுதுகிறார்கள். புனைபெயர் என்பதுதான் வினைத்தொகை. புனைப்பெயர் என்று பிழையாக எழுதப்படுகிறது.
ஆ). நினைவுகூறுதல், நினைவுகூர்தல் ஆகிய இரண்டுமே சரிதாம். இவ்விரண்டு தொடர்களில் ஒன்றினை ’ஊறுக்காய் தவறு’ என்றது போலக் கருத இயலாது. ஆனால், நினைவினைக் கூறுதல் என்ற பொருளில் வருவது நினைவு கூறுதல். அவன் தன்னுடைய நினைவினைக் கூறுகிறான். அது நினைவு கூறுதல். நினைவிலிருந்து ஆழ்ந்து மீட்டுச் சொல்லுதல் நினைவுகூர்தல். அவன் நினைவுகூர்கிறான்.
இ). ‘கொழும்புவில்’ என்று எழுதக்கூடாதுதான். கொழும்பில் என்றே எழுதவேண்டும். ஆமாம், சரிதான். ஆனால், இவ்வகைப் பிழையை ’முத்து’ என்னும் தம் பெயர்க்கும் பொருத்திப் பார்த்தே ஆண்டுள்ளாரா என்று அவர் உறுதிப்படுத்தலாம். வைரமுத்து என்கின்ற தம் பெயரோடு வேற்றுமை உருபுகளைச் சேர்க்கும்போது வைரமுத்தை, வரைமுத்தால், வைரமுத்துக்கு, வைரமுத்தின், வைரமுத்தினது, வைரமுத்துக்கண் என்று எழுதி வந்தாரா ? அவ்வாறே எழுதியிருப்பின் சரி. ஆனால், வைரமுத்துவை, வைரமுத்துவுக்கு என்று அவரும் எழுதியிருந்தாலும் பிழை.
ஈ). தண்ணீர் தேசம்’ என்ற தொடரில் த் தோன்றினால்தான் தமிழ்மொழித் தொடர். நீர், தேசம் ஆகிய இருசொற்களும் வடமொழியிலும் உள்ளன. நீர் தேசம் என்று வல்லொற்று மிகாமல் பயன்படுத்தினால் அங்கே வடமொழித் தொடரைத்தான் ஆள்வதாகப் பொருள். நீர்த்தேயம்/நீர்த்தேசம் என்று ஆண்டால்தான் தமிழ்த்தொடரை ஆள்வதாகப் பொருள். தண்ணீர்த் தேசம் என்று வல்லொற்று மிகுந்து வருவதே சரி. ‘தண்ணீர் தேசம்’ என்று ஆண்டமையால் அது வடமொழித் தொடரோடு இணக்கமுற்றுவிட்டது. இரண்டும் வடமொழிச் சொற்களேயாயினும் இயன்றவரைக்கும் தமிழ்மொழிப் பண்புகளைப் புகுத்தி எழுதுவதுதான் கொள்கையாக இருக்கவேண்டும்.
உ). எமக்குத் தமிழ் சொல்லித்தரும் பணியில் ஈடுபடுகிறவர்களைப் பார்த்து நான் கோபம் கொள்வதில்லை; கும்பிட்டுச் சிரிக்கிறேன் - என்கிறார். எமக்கு என்று தன்மைப் பன்மையில் இத்தொடர் தொடங்குவதால் ‘யாம் கோபம் கொள்வதில்லை, கும்பிட்டுச் சிரிக்கிறோம்’ என்று எழுதவேண்டும். இல்லையேல் தொடக்கமே ‘எனக்கு’ என்றிருக்கவேண்டும்.
ஒப்பீட்டளவில் வைரமுத்தின்(Vairamuthu) எழுத்துகளில் பிழைகள் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அவர் எழுதுவதிலும் உறுதியாகப் பிழைகள் உள்ளன. எழுபது, எண்பதுகளின் பிழையாட்சிகள் பல இன்னும் அவரிடம் உதிராமல் ஒட்டியிருக்கின்றன. அவற்றைக் களையவேண்டும். தம் உரையிலும் கவிதையிலும் எண்ணற்ற வடசொற்களைக் கூச்சமில்லாமல் தொடர்ந்து பயன்படுத்தக் கூடியவர். அவற்றைத் தவிர்க்க முயன்றதில்லை.
வடசொற்கள் தவிர்த்து எழுதுக என்றால் இவர்கள் தவித்துப்போய்விடுவார்கள். கடைசியாகக் கூறியதற்கு வைரமுத்து(Poet Vairamuthu) மட்டுமே இலக்காக முடியாது, அக்குறைபாடு இன்றெழுதுகின்ற தொண்ணூற்றொன்பது விழுக்காட்டினர்க்கும் பொருந்தும். வைரமுத்து முகநூலைக் கையாண்டு பழகிவிட்டார். அதற்காக வாழ்த்துவோம்!
இவ்வாறு அந்தப்பதிவில் கவிஞர் மகுடேசுவரன்(Writer Magudeswaran Govindarajan) குறிப்பிட்டுள்ளார்.