

நிதி முடக்கம் முடிவுக்கு வந்தது
US Government Shutdown Update in Tamil : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை (நவம்பர் 12) இரவு அரசாங்க நிதி மசோதாவில் கையெழுத்திட்டார். இது 43 நாட்களாக நீடித்த அரசின் நிதி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இரு அவைகளும் ஒப்புதல்
அமெரிக்க நிதியாண்டு செப்டம்பர் 30-ல் முடிவடையும். அக்.1-ல் புதிய நிதியாண்டு தொடங்கும். இதனையடுத்து ஆண்டுதோறும் புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா செப்.30-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அமெரிக்க அரசு இயங்கத் தேவையான ஆண்டு செலவின மசோதாவுக்கு இந்த இரு அவைகளின் உறுப்பினர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக, 60 சதவீத செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசின் செலவினங்களுக்கான நிதி விடுவிக்கப்படும். இந்நிலையில், அக்.1 அமெரிக்க நாடாளுமன்றத்தில் 60% உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்காததால் நிதி மசோதா தோல்வியடைந்தது. இதனால் அமெரிக்க அரசு எதிர்கொண்ட நிதி முடக்கம் 43 நாட்களாக நீடித்தது.
அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை
இந்த நிதி முடக்கத்தால் அமெரிக்காவில் ராணுவம், எல்லை பாதுகாப்புப் படை, விமானக் கட்டுப்பாட்டுத் துறை உள்ளிட்ட சில அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கியது. மற்ற துறைகளின் அரசு ஊழியர்கள் பணிபுரியவில்லை, அதுபோல அரசு ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை.
கையெழுத்து விழா
இந்தச் சூழலில் சில ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன், செனட் சபையில் நிதி மசோதா நேற்று நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 222 வாக்குகளும், எதிராக 209 வாக்குகளும் பதிவானது. மசோதா நிறைவேறிய இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கையெழுத்திடும் விழா நடந்தது.
நாட்டு மக்களுக்கு டிரம்ப் அறிவுரை
இந்த மசோதா நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திடும் முன்பு , “இன்று நாங்கள் மிரட்டிப் பணம் பறிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்ற தெளிவான செய்தியை சொல்லியுள்ளோம். நான் அமெரிக்க மக்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன், நீங்கள் இதை மறந்துவிடக் கூடாது. இடைக்காலத் தேர்தல்கள் வரும்போது ஜனநாயக கட்சியினர் நம் நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று குறிப்பிட்டு பேசினார்.
அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்புவர்
இந்த மசோதா ஜனவரி 30-ம் தேதி வரை அரசுக்கான நிதியுதவியை நீட்டிக்கும். இதனால் அரசின் அத்தனை துறைகளும் இனி செயல்பட ஆரம்பிக்கும். அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்புவார்கள், அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படும் என்று மசோதாவில கையெழுத்திடும் முன்பு கூறினார்.