

டிரம்பின் அமைதி திட்டம்
Donald Trump on Israel Gaza War Ceasefire Deal : காசா பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனிடையே காசா பகுதியில் நிலவி வரும் போருக்கு முற்றுப் புள்ளி வைத்து அங்கு நீண்ட கால அமைதியை நிலை நாட்டும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்சங்களை கொண்ட ’விரிவான அமைதி திட்டத்தை’ முன் வைத்தார். போருக்கு பிந்தைய காசாவின் நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ‘அமைதி வாரியம்’ என்ற உயர்நிலை அமைப்பை டிரம்ப் உருவாக்கியுள்ளார்.
டிரம்பின் புதிய முடிவு
அமைதி வாரியத்தின் கட்டமைப்பு அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் இயக்கவுள்ள இந்த ‘அமைதி வாரியத்தில்’ அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், உலக வங்கி தலைவர் அஜய் பங்கா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட உறுப்பினர்களாக உள்ளனர். இந்த வாரியத்தில் யார் உறுப்பினராக வேண்டும் என்பது குறித்த இறுதி முடிவை டிரம்ப் தான் எடுப்பார் என்று தெரியவருகிறது.
பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த டிரம்ப்
இந்நிலையில், இந்த அமைதி வாரியத்தில் உறுப்பினராக சேர பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். டிரம்ப் அனுப்பிய கடிதத்தில் “மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டும் அற்புதமான முயற்சியில் என்னுடன் சேரவும், அதே நேரத்தில் உலகளாவிய மோதலை தீர்ப்பதில் ஒரு துணிச்சலான புதிய அணுகுமுறையை மேற்கொள்ளவும் இந்திய குடியரசின் பிரதமரான உங்களை அழைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. செப்டம்பர் 25, 2025 -ஆம் ஆண்டு காசா மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு விரிவான திட்டத்தை நான் அறிவித்தேன் என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்பின் 2803 தீர்மானம்
மேலும், இது அரபு, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பா உட்பட முக்கிய நாட்டு தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு 20 அம்ச திட்டமாகும். இந்த திட்டத்தை மேம்படுத்தும் வகையில் நவம்பர் 17 அன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் 2803 தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த தொலைநோக்கு பார்வையை வரவேற்று ஒப்புதல் அளித்தது. இப்போது இந்த கனவுகள் அனைத்தையும் யதார்த்தமாக மாற்ற வேண்டிய நேரம் இது. எங்கள் முயற்சி நீடித்த அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான உன்னத பொறுப்பை ஏற்க தயாராக உள்ள ஒரு புகழ்பெற்ற நாடுகளின் குழுவை ஒன்றிணைக்கும். உலக தலைவர்களை விரைவில் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.