

Europe Heatwave Death Toll Report Nature Health
'நேச்சர் ஹெல்த்' இதழின் அதிர்ச்சி ஆய்வு
ஐரோப்பிய கண்டத்தில் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் நிலவிய கடுமையான வெப்ப அலை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாகப் புதிய ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'நேச்சர் ஹெல்த்' இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, ஐரோப்பாவின் 854 நகரங்களில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பதிவான வெப்ப அலைகளையும், பல்வேறு வயதினரின் உயிரிழப்புகளையும் விரிவாக கணக்கிட்டு வெளியிட்டுள்ளது.
50,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஆய்வின் முடிவுகளின்படி, ஐரோப்பாவில் நிலவிய தீவிர கோடை வெப்பம் காரணமாக மொத்தம் 50,391 பேர் உயிரிழந்துள்ளனர்.
மனிதத் தவறுகளால் ஏற்பட்ட காலநிலை மாற்றம்
உயிரிழந்தவர்களில் 32,619 பேரின் மரணத்திற்கு மனிதர்களின் செயல்பாடுகளால் உருவாகும் காலநிலை மாற்றமே முதன்மை காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்பு எண்ணிக்கை, கடந்த 2022-ஆம் ஆண்டில் பதிவான 29,480 உயிரிழப்புகளை விட 71 சதவீதம் அதிகமாகும்.
மேலும் மே மாதத்தில் வீசிய வெப்ப அலையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த ஆய்வில் இடம்பெற்ற 854 நகரங்கள் ஐரோப்பாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதத்தை மட்டுமே உள்ளடக்கியுள்ளன.
எனவே, ஐரோப்பா முழுவதும் ஒட்டுமொத்தமாக ஏற்பட்ட உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை இந்த 50,391-ஐ விட மிகவும் அதிகமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர வெப்ப அலையின் தாக்கம்
ஜூன் 17 முதல் ஜூலை 1 வரையிலான காலகட்டத்தில் வீசிய தீவிர வெப்ப அலையின் போது மட்டும் மொத்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு பதிவாகியுள்ளது.
இந்த குறிப்பிட்ட காலத்தில் வழக்கமான வெப்பநிலையை விட 5.3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டதே இந்த அதிக அளவிலான உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
====================