

மியான்மார் ஆயுத பயிற்சி வழக்கு :
மியான்மரில் ஆயுதக் குழுக்களுக்கு ட்ரோன் போர் பயிற்சி அளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட அமெரிக்கர் மேத்யூ ஆரோன் வான் டைக், ஒரு மாதத்திற்குப் பிறகு அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார்.
டெல்லி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் பங்கேற்பதற்காக அவர் மீண்டும் இந்தியா வந்துள்ளார்.
இந்த வழக்கில் அவருடன் தொடர்புடைய ஆறு உக்ரைன் நாட்டவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
மேத்யூ வான் டைக் மற்றும் ஆறு உக்ரைன் நாட்டவர்கள் கடந்த மார்ச் மாதம் தேசியப் புலனாய்வு முகமையான NIA-வால் கைது செய்யப்பட்டனர்.
மியான்மரில் செயல்படும் ஆயுதக் குழுக்களுக்கு ட்ரோன் போர் பயிற்சி அளித்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதற்கிடையில், செப்டம்பர் மாதம் டெல்லி நீதிமன்றம் ஏழு பேருக்கும் பிணை வழங்கியது. மேலும், குடும்பத்தினரைச் சந்திப்பதற்காகத் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல ஒரு மாத காலம் அனுமதி அளித்தது.
விசாரணைக்கு தேவைப்படும் நேரத்தில் ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில் அமெரிக்கா சென்ற வான் டைக், அக்டோபர் 23-ம் தேதி நடைபெறும் விசாரணையில் பங்கேற்பதற்காக இந்தியா திரும்புவார் என்று முன்னதாகத் தகவல்கள் வெளியாகின.
அதன்படி, அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக அல்லாமல் நேரில் ஆஜரானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
NIA தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில், UAPA சட்டப் பிரிவுகள் சேர்க்கப்படவில்லை. குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் மட்டுமே இடம்பெற்றன.
இருப்பினும், UAPA தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக NIA தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வான் டைக் இந்தியா திரும்பியிருப்பது வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மியான்மரில் ஆயுதக் குழுக்களுக்குப் பயிற்சி அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக NIA விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
=======================