

Navdeep Bains Ontario Liberal Party Leader Canada Election
50.3% வாக்குகளுடன் உள்கட்சித் தேர்தலில் வெற்றி
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட நவ்தீப் பெயின்ஸ் (49) கனடாவின் ஒன்டாரியா மாகாண லிபரல் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் பதவிக்கான உள்கட்சித் தேர்தலில், 50.3 சதவீதம் வாக்குகளைப் பெற்று வெற்றி அவர் பெற்றுள்ளார்.
உள்கட்சித் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பேசிய நவ்தீப் பெயின்ஸ், வரவிருக்கும் அடுத்த மாகாணத் தேர்தலுக்குக் கட்சியை வெற்றிகரமாகத் தயார்படுத்துவதே தனது முதன்மையான பணி என்று தெரிவித்துள்ளார்.
ஒன்டாரியா மாகாணத்தைச் சேர்ந்த இந்தப் பிராந்தியக் கட்சிக்கும், ஆளும் கனடா லிபரல் கட்சிக்கும் இடையே நல்ல நட்புறவு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
போன்னி கிரோம்பிக்குப் பிறகு புதிய தலைமை
ஒன்டாரியா லிபரல் கட்சித் தலைவராக இருந்த போன்னி கிரோம்பி (Bonnie Crombie) கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்ற உள்கட்சித் தேர்தலில் நவ்தீப் பெயின்ஸ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ட்ரூடோ ஆதரவாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தீவிர ஆதரவாளரான நவ்தீப் பெயின்ஸ், கனடா மத்திய அமைச்சரவையில் அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
2030 தேர்தல் சவால்
ஒன்டாரியா மாகாணத்தில் கன்சர்வேடிவ் கட்சி கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. 2018 தேர்தலில் லிபரல் கட்சி படுதோல்வியை சந்தித்த பிறகு இதுவரை மூன்று தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
எனவே, 2030-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மாகாணத் தேர்தல் நவ்தீப் பெயின்ஸுக்கும், அவரது கட்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வாழ்வா-சாவா களமாகப் பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் கிராமத்திலிருந்து கனடா அரசியல் வரை
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் நவ்தீப் பெயின்ஸ். அவர் குழந்தையாக இருந்தபோதே தொழிலாளிகளான அவரது பெற்றோர் வாழ்வாதாரத்திற்காகக் கனடாவுக்குக் குடிபெயர்ந்தனர்.
கனடாவில் வளர்ந்து கல்வி கற்ற நவ்தீப், தீவிர அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பாகப் பிரபல ஃபோர்டு மோட்டார் (Ford Motor) நிறுவனத்தில் மூத்த நிதி ஆலோசகராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
======================