

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா முதல்முறையாக இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
அதன்படி, வரும் நவம்பர் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இந்தியாவில் அவர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நேபாளத்தின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, அவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இந்த பயணத்தின்போது பிரதமர் மோடியைச் சந்தித்துபல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியா நேபாளம் இடையே நீண்டகாலமாக வர்த்தகம், மின்சாரம், நீர்வளம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது, நீர்மின் திட்டங்கள், எல்லை வழி போக்குவரத்து, விமான போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே திறந்த எல்லைப் பகுதி இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மட்டுமில்லாமல் மக்களின் போக்குவரத்து, கலாச்சாரம், பாதுகாப்பு எனப் பல்வேறு தொடர்புகள் உள்ளன.
இதற்கிடையே, காலாபானி, லிபுலேக் உள்ளிட்ட எல்லை பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சினைகள் இருந்து வருகின்றன.
இந்த விவகாரங்களும் இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு பிறகு, அந்நாட்டின் மறுசீரமைப்பு பணிகளுக்கு இந்தியா உதவி செய்வது குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படலாம்.
அதேபோல், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், மின்சார ஒத்துழைப்பு, எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்தும் மோடி பாலேந்திர ஷா இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுது.