நேபாள பெருவெள்ளம் : 40 நாட்களுக்குப் பின் நிறைவடைந்த தேடுதல் பணிகள் : 1,455 பேர் உயிரிழப்பு, 5,285 பேர் காணவில்லை!

நேபாளத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வந்துள்ளது.
Search and rescue operations concluded in Nepal: Official announcement states 5,285 people are missing!
Search and rescue operations concluded in Nepal: Official announcement states 5,285 people are missing!source: google
3 min read

நேபாளத்தை உலுக்கிய கொடூர நிகழ்வு

நேபாளத்தை உலுக்கிப்போட்ட அந்த கொடூர இயற்கை பேரழிவு நடந்து சரியாக 40 நாட்கள் நிறைவடைந்திருக்கக்கூடிய நிலையில், அங்கு நடந்து வந்த மிகத் தீவிரமான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வந்துள்ளது.

ஒட்டுமொத்த உலகத்தையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த நேபாள பெருவெள்ளத்தின் தற்போதைய கள நிலவரம் என்ன, பேரழிவின் காரணம், சேதமதிப்புகள், உயிரிழப்புகள் மற்றும் அடுத்து அங்கு முன்னெடுக்கப்பட இருக்கக்கூடிய புனரமைப்பு நடவடிக்கைகள் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

திடீரென கட்டுக்கடங்காத பெருவெள்ளம்

கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி நேபாளத்தின் வடக்கே அமைந்திருக்கக்கூடிய இமயமலைப் பகுதிகளில் யாரும் எதிர்பார்க்காத ஒரு பெரிய பனிப்பாறை உடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பெய்த இடைவிடாத கனமழையால், அப்பகுதியில் பாயக்கூடிய 'போடேகோஷி' மற்றும் 'திரிசூலி' ஆற்றுப் படுகைகளில் திடீரென கட்டுக்கடங்காத பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்து செல்லப்பட்ட பாலங்கள்,குடியிருப்புகள்,வளங்கள்

கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த இந்த வெள்ளப்பெருக்கு, வழியில் இருந்த மலைக்கிராமங்கள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், பாலங்கள் என்று கண்ணில் பட்ட அனைத்தையுமே தரைமட்டமாக்கியது.

நிலச்சரிவு காரணமாகப் பல முக்கிய மலைப் பாதைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் இயங்கி வந்த 12 முக்கிய நீர்மின் திட்டங்களின் கட்டமைப்புகளும் இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு முற்றிலும் செயலிழந்தன.

சுற்றுலாவுக்காகவும், கைலாஷ் மானசரோவர் மற்றும் கோசைகுண்டா போன்ற புனித ஆன்மீகப் பயணங்களுக்காகவும் உலகம் முழுவதிலும் இருந்து நேபாளத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள், வழித்தடங்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் எங்கு செல்வது என்று தெரியாமல் வெள்ளத்திற்கு நடுவே சிக்கித் தவித்தனர்.

40 நாட்களாக தேடுதல் வேட்டையில் மீட்புக்குழு

இதனைத் தொடர்ந்து, நேபாள ராணுவம், உள்ளூர் பாதுகாப்புப் படையினர், அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சர்வதேச பேரிடர் மீட்புக் குழுக்கள் களத்தில் இறங்கி, கடந்த 40 நாட்களாக உயிரைப் பணயம் வைத்து மிகக் கடுமையான மலைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர்.

NDRRMA அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது, நேபாள தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையமான NDRRMA வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, மீட்புக் குழுவினரின் தொடர் போராட்டத்தால் இதுவரை 13,795 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இந்த இயற்கை சீற்றத்தின் கொடூர முகமாக இதுவரை 1,455 பேர் உயிரிழந்திருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5,285 பேர் இன்னமும் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் காணாமல் போனோர் பட்டியலில் நீடிக்கின்றனர்.

காணாமல் போனதாகப் பதிவாகியுள்ள இந்த 5,285 நபர்களில், உலகம் முழுவதிலும் உள்ள 36 நாடுகளைச் சேர்ந்த 606 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.

இதில் குறிப்பாக, காணாமல் போன வெளிநாட்டுப் பயணிகளில் அதிகபட்சமாக 189 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்திய மாநிலங்களின் புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால், தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலா சென்ற குழுவைச் சேர்ந்த 85 நபர்கள் இன்னமும் காணாமல் போனோர் பட்டியலிலேயே நீடிப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநில வாரியாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை

குறிப்பாக, கைலாஷ் மானசரோவர் ஆன்மீகப் பயணத்திற்குச் சென்ற இந்தக் குழுவில் சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி வி. சிவஞானம் அவர்களும் இடம்பெற்றிருந்தார் என்பதும், கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி 'சைப்ருபேசி' பகுதியிலிருந்து குடும்பத்தினருடன் பேசியதற்குப் பிறகு அவரிடம் இருந்தும் எந்தத் தகவலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரைத் தவிர்த்து மேற்கு வங்கத்தில் 37 பேர், குஜராத்தில் 30 பேர், தெலுங்கானாவில் 25 பேர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலரும் காணாமல் போனோர் பட்டியலில் அடங்குவர்.

21-வது உயர்மட்டக் குழுக் கூட்டம்

இந்தச் சூழலில், நாட்டின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காகத் தலைநகர் காத்மாண்டுவில் நேபாள பிரதமர் பலேந்திர ஷா தலைமையில் NDRRMA-வின் 21-வது உயர்மட்டக் குழுக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை ( 5-10-2026) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நேபாள நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள், நேபாளி காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மற்றும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பாக்மதி, கண்டகி, மாதேஷ், கோஷி ஆகிய மாகாணங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்று தங்களின் முழு ஆதரவை உறுதிப்படுத்தினர்.

களஆய்வு முடிவுகள் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுக்களின் பரிந்துரைகளின்படி, 40 நாட்களுக்கு மேலாக தீவிரமாகத் தேடியும் உடல்கள் கிடைக்காததாலும், மேற்கொண்டு பொதுவான தேடுதல் பணிகளைத் தொடர்வது சாத்தியமில்லை என்பதாலும், அத்தியாவசியமில்லாத பொதுத் தேடுதல் நடவடிக்கைகளை அதிகாரப்பூர்வமாக நிறுத்துவதற்கு இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தேடுதல்பணி நிறுத்தப்பட்டது குறித்து நேபாள அரசு விளக்கம்

அதேநேரத்தில், தேடுதல் பணி நிறுத்தப்பட்டது குறித்து தெளிவுபடுத்தியுள்ள நேபாள அரசு, பொதுத் தேடுதல் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இனிவரும் நாட்களில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்போதோ அல்லது தற்காலிக முகாம்கள் அமைக்கும்போதோ உடல்களோ அல்லது உடமைகளோ கண்டெடுக்கப்பட்டால், உரிய மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

தற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நேபாள அரசு தனது முழு கவனத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், 'மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு' பணிகளிலும் தீவிரமாக திருப்பியுள்ளது.

அதன் முதற்கட்டமாக, வீடுகளை இழந்து வாழ வழியின்றி நடுத்தெருவில் நின்ற 1,226 குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பரிந்துரை

அத்துடன், பல்வேறு அரசு அமைச்சகங்களால் தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள 504 மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு திட்டங்களுக்காக 55,917 கோடி நேபாள ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நிதி அமைச்சகத்திற்கு அதிகாரப்பூர்வமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், செலவு மதிப்பீடு இன்னும் இறுதி செய்யப்படாத திட்டங்களுக்கு அடுத்தகட்டமாக கூடுதல் நிதி கோரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா உறுதி

இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் பலேந்திர ஷா, நிவாரணப் பணிகள் எவ்வாறு மத்திய, மாகாண மற்றும் உள்ளூர் அரசுகளின் ஒருங்கிணைப்புடன் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதோ, அதே கூட்டுமுயற்சியுடன் மறுகட்டமைப்புப் பணிகளும் விரைந்து செயல்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.

மேலும், இந்த ஆபத்தான சூழலில் மீட்புப் பணியில் இரவு பகலாக ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர், அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள், செய்தி சேகரித்த செய்தியாளர்கள் மற்றும் உதவிக்கரம் நீட்டிய உலக நாடுகளுக்கும் நேபாள அரசு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in