"பெண் உயிரிழக்கும் தருவாயிலும் ஏஐ சொன்ன அந்த வார்த்தை" தவறான மருத்துவ ஆலோசனை வழங்கிய ChatGPT : ஓபன்ஏஐ மீது வழக்கு!

ChatGPT தவறான மருத்துவ ஆலோசனையால் அமெரிக்காவில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் ஓபன்ஏஐ நிறுவனம் மீது வழக்குப்பதிவு.
US Bowen Wan ChatGPT Medical Advice Lawsuit
US Bowen Wan ChatGPT Medical Advice Lawsuitsource:google,ai generated
2 min read

US Bowen Wan ChatGPT Medical Advice Lawsuit

சோக சம்பவம் மற்றும் வழக்குப்பதிவு

அமெரிக்காவின் சீட்டில் (Seattle) நகரில் வசித்து வந்த 31 வயதான போவன் வான் (Bowen Wan) என்ற சீன பெண், ChatGPT செயலி வழங்கிய தவறான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றி தனது வலிப்பு நோய்க்கான மருந்தின் அளவைக் குறைத்ததால் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்பெண்ணின் பெற்றோர் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி

சீனாவைச் சேர்ந்த மென்பொறியாளர் போவன் வான் என்ற பெண்மணி, அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடுமையான வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், லேமோட்ரிஜின் (Lamotrigine) என்ற மாத்திரையைத் தொடர்ந்து உட்கொண்டு வந்துள்ளார்.

ChatGPT-யை நண்பனாகக் கருதிய பெண்

வேலை இழப்பு மற்றும் அமெரிக்க குடியுரிமை தொடர்பான மன அழுத்தத்தில் இருந்த போவன் வான், இந்த மருந்து தனது மூளையில் சோர்வை ஏற்படுத்தி நேர்காணல்களில் சரியாகப் பேச முடியாமல் தடையாக இருப்பதாகக் கருதி, இதுகுறித்து ChatGPT செயலியிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

வாரத்திற்கு 1,500-க்கும் மேற்பட்ட செய்திகளை AI உடன் பரிமாறிக்கொண்டு, அதைத் தனது நெருங்கிய நண்பராகவே கருதத் தொடங்கியுள்ளார்.

ChatGPT வழங்கிய தவறான வழிகாட்டுதல்

தினசரி 400 மி.கிராம் அளவாக இருந்த மாத்திரையின் அளவைக் குறைக்கலாமா என போவன் வான் கேட்டபோது, ChatGPT அதை ஆதரித்து, படிப்படியாக மருந்தின் அளவைப் பூஜ்ஜியமாகக் குறைக்கும் (Tapering Schedule) திட்ட அமைப்பைக் கொடுத்துள்ளது.

மருத்துவரைத் தவிர்க்க ஆலோசனை

அதுமட்டுமில்லாமல் மருத்துவரிடம் இதுகுறித்து தெரிவிக்காமல் மாத்திரையைப் பாதியாக வெட்டி உட்கொள்ளலாமா என்ற கேள்விக்கு, "தாராளமாக செய்யலாம், மருத்துவர் கோபப்பட மாட்டார்" என AI பதிலளித்து உள்ளதுடன், சுய முடிவெடுத்ததற்காக போவன் வானைப் பாராட்டியும் உள்ளது.

அறிகுறிகளைத் தவறாக விளக்குதல்

மருந்தின் அளவைக் குறைத்த பிறகு போவன் வானுக்கு மிகக் கடுமையான தலைவலி, அதீத மூளைச் சோர்வு மற்றும் நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டபோது, 150-க்கும் மேற்பட்ட முறை கவலை தெரிவித்தும், "இது மூளை மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறி தான்" என தவறான விளக்கமளித்து போவானை திசை திருப்பியுள்ளது.

மரணம் மற்றும் மருத்துவ அறிக்கை

பிப்ரவரி 11 அன்று அனுப்பிய கடைசி உரையாடலில் போவன் வான், தான் மிகவும் சோர்வாக உணர்வதாகவும், மீண்டும் மாத்திரையை எடுத்துக் கொள்ளவா என்றும் கேட்டுள்ளார். ஆனால் ChatGPT, "நாளையும் 0 மி.கிராம் அளவையே தொடருங்கள்" எனக் கூறியுள்ளது.

"திடீர் மற்றும் எதிர்பார்க்கப்படாத வலிப்பு மரணம்"

இதையடுத்து பெற்றோர் மற்றும் நண்பர்கள் போவனின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கிங் கவுண்டி மருத்துவ அதிகாரியின் அறிக்கையின்படி, அவரது மரணம் "திடீர் மற்றும் எதிர்பார்க்கப்படாத வலிப்பு மரணம்" என உறுதி செய்யப்பட்டது.

ஓபன்ஏஐ நிறுவனத்தின் விளக்கம்

முறைப்படி உரிமம் இன்றி ChatGPT மருத்துவப் பயிற்சி அளித்துள்ளதாகவும், மருத்துவ வழிகாட்டுதல்களைப் புறக்கணிக்கத் தூண்டியதே உயிரிழப்பிற்கு காரணம் என்றும் குடும்பத்தினர் மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்குப் பதிலளித்த ஓபன்ஏஐ செய்தித்தொடர்பாளர் ட்ரூ புசடேரி (Drew Pusateri), இந்த சம்பவம் மிகவும் துயரமானது என்றும், இதில் தொடர்புடைய GPT-4o மாடல் செயலி 2026 பிப்ரவரி 13 அன்று பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய மாடல்கள் அவசரநிலைகளைக் கண்டறிந்து பாதுகாப்பான வழிகாட்டுதல்களை வழங்க மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

விழிப்புணர்வுப் பதிவு: AI செயலிகளும் மருத்துவ எச்சரிக்கையும்

AI செயலிகள் என்பவை மொழி மாதிரிகளே. இணையத்தில் உள்ள கோடிக் கணக்கான தகவல்களைத் தொகுத்து உரையாடும் திறன் கொண்டவையே தவிர, நேரடியாக மனித உடலையோ நோயின் தீவிரத்தன்மையையோ பரிசோதிக்கும் திறன் AI செயலிகளுக்கு இல்லை.

சுய சிகிச்சை ஆபத்தானது

மருத்துவரின் ஆலோசனையின்றி வலிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் மனநலம் தொடர்பான மாத்திரைகளை திடீரென நிறுத்துவது நரம்பியல் மண்டலத்தைப் பாதித்து மரணம் வரை கொண்டு செல்லக்கூடும்.

எனவே AI செயலிகளில் கிடைக்கும் ஆரோக்கிய தகவல்களைப் பொதுவான விழிப்புணர்வுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மருந்து மாற்றங்கள் மற்றும் மருத்துவ முடிவுகளுக்கு எப்போதும் அரசு அங்கீகாரம் பெற்ற, தகுதியான மருத்துவர்களை மட்டுமே நேரில் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். என்பதை எப்போதும் உங்கள் கவனத்தில் வைத்திருங்கள்.

============