Singeetham Srinivasa Rao Cinema Journey and Legacy
தொடக்க காலமும் தெலுங்கு திரையுலக பிரவேசமும்
இந்திய திரையுலகின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாசராவ், தெலுங்கு சினிமாவில் புதுமையான கதைக்களங்களையும் அதிநவீன தொழில்நுட்ப முயற்சிகளையும் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
1972-ஆம் ஆண்டு 'நீதி நிஜாயிதி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தொடர்ந்து பல்வேறு பாணிகளிலான படங்களை இயக்கி முத்திரை பதித்தார்.
1970-களில் வெளியான 'ஜமீந்தாரு காரி அம்மாயி', 'அமெரிக்கா அம்மாயி', 'பந்துலம்மா' போன்ற திரைப்படங்கள் தெலுங்கு ரசிகர்களிடையே அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தன.
மயூரி முதல் புஷ்பக விமானம் வரை
1979-இல் கமல்ஹாசனுடன் இணைந்து அவர் உருவாக்கிய 'சொம்மோகடிதி சொக்கோகடிதி' தெலுங்கு திரையுலகில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து, 1985-இல் பரதநாட்டியக் கலைஞர் சுதா சந்திரனின் உண்மையான வாழ்க்கையை மையமாகக் கொண்டு அவர் இயக்கிய 'மயூரி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் 14 நந்தி விருதுகளை வென்று சாதனை படைத்தது.
மேலும் 1987-இல் வெளியான 'புஷ்பக விமானம்' தமிழில் 'பேசும்படம்' எவ்வித வசனங்களும் இன்றி உருவாக்கப்பட்டு, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றது.
சினிமா எல்லைகளை மாற்றியமைத்த புதுமை முயற்சிகள்
நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் 1991-இல் வெளியான 'ஆதித்யா 369' திரைப்படம், தெலுங்கு சினிமாவின் முதல் டைம் டிராவல் மற்றும் அறிவியல் புனைகதை திரைப்படமாக அமைந்து அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்தது.
தொடர்ந்து 1994-இல் இவர் இயக்கிய 'பைரவ த்வீபம்' நாட்டுப்புற கற்பனை சாகசப் படமாக வெளிவந்து, சிறந்த இயக்குநர் விருது உட்பட 9 நந்தி விருதுகளை வாரிக் குவித்தது. மேலும் 'பிருந்தாவனம்', 'மேடம்', 'ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன விஜயம்', 'ராஜஹம்சா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை அவர் தந்தார்.
கடைசி திரைப்படமும் முத்திரை இயக்கமும்
தனது 94-வது வயதில் இளைய தலைமுறையின் காதலை மையமாகக் கொண்டு 'சிங்கீதம்' என்ற மியூசிகல் பேண்டசி காமெடி திரைப்படத்தை அவர் இயக்கினார்.
படத்தின் முதல் 20 நிமிடங்களுக்கும் மேலாக வசனங்களின்றி பாடல்களாகவே கதையை நகர்த்தி இந்திய திரையுலகையே வியப்பில் ஆழ்த்தினார்.
வியாபார வெற்றியை மட்டும் தனது நோக்கமாக்காமல், சினிமா எனும் கலை வடிவத்திற்கு ஒவ்வொரு படத்திலும் புதிய பரிமாணத்தைக் கொடுத்த சிங்கீதம் சீனிவாசராவ், இந்திய சினிமா வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: நியாய விலைக் கடைகளுக்கான துவரம் பருப்பு கொள்முதலில் ரூ.187.56 கோடி சேமிப்பு: தவெக அரசு சாதனை!
===========