முதலில் பாகிஸ்தான் பேட்டிங் :
India vs Pakistan Asia Cup 2025 : ஆசிய கோப்பை டி20 போட்டிகள், துபாய், அபுதாபி நகரங்களில் நடந்து வருகின்றன. இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 நாடுகளின் அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. 14ம் தேதி நடந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்(IND vs PAK) அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
இந்தியா அற்புதமான பந்துவீச்சு :
தொடக்க வீரர் சயீம் அயூப், ஹர்திக் பாண்டியா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே அவுட்டானார். 2வது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஹாரிசை (3 ரன்) ஆட்டமிழக்கச் செய்தார். இந்திய வீரர்கள் அற்புதமாக பந்து வீச, எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர்.
பாகிஸ்தான் 9\127 ரன்கள் :
பகார் ஜமான் 17, கேப்டன் சல்மான் ஆகா 3, ஹசன் நவாஸ் 5, முகம்மது நவாஸ் 0, ஷாகிப்ஸதா பர்கான் 40, பாஹீம் அஷ்ரப் 11 ரன்கள் என எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான், 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன் மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3, ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல் தலா 2, ஹர்திக் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர்.
இந்தியா 3\131 ரன்கள் :
128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் கண்டது. முதலில் விளையாடிய அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 31 ரன்களுடன் வெளியேறினார். மறுமுனையில் ஆடிய ஷுப்மன் கில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 47 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். திலக் வர்மா 31 ரன்களும், ஷிவம் டூபே 10 ரன்களும் என 3 விக்கெட் இழப்புக்கு 15 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்து வெற்றியை தனதாக்கியது இந்திய அணியின் 3 விக்கெட்டுகளையும் சயீம் அயூப் கைப்பற்றியிருந்தார்.
கெத்து காட்டிய இந்திய வீரர்கள் :
டாஸின்போது இரு அணி கேப்டன்களும் கைகொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் என்ற உணர்வுடன் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் வாழ்த்து தெரிவித்து கொள்வது வழக்கம். அப்படி எந்த நிகழ்வும் நடைபெறவில்லை.
மேலும் படிக்க : Asia Cup T20: வங்கதேசம் அசத்தல் வெற்றி: ஹாங்காங் அணியை வீழ்த்தியது
இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் “நம் அரசுடன் பிசிசிஐ-யும், நாங்களும் நிற்கிறோம். கைகுலுக்க வேண்டாம் என்ற முடிவை நாங்கள் எடுத்தோம். விளையாடவே இங்கு வந்தோம். விளையாடினோம், பதிலடி கொடுத்தோம்” என்று விளக்கம் அளித்தார்.
=====