தேசிய திரைப்பட விருதுகள் :
Dadasaheb Phalke Award 2025 Winner Mohanlal : ஆண்டுதோறும் இந்திய அளவில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், மொழி வாரியாக சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2023ம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் நடைபெற்றது.
மோகன்லாலுக்கு தாதா சாகேப் விருது :
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார். திரைத்துறையின் வாழ்நாள் சாதனையாளருக்கான `தாதா சாகேப் பால்கே' விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த நடிகர் ஷாருக்கான் :
சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கானுக்கு ஜவான் படத்தில் நடித்ததற்காக வழங்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், ஷாருக்கான் முதல்முறையாக தேசிய விருது பெறுவது குறிப்பிடத்தக்கது. 12த் பெயில் என்ற படத்தில் நடித்த விக்ராந்த் மாஸேவுக்கு சிறந்த நடிகருக்கான விருது பகிர்ந்து அளிக்கப்பட்டது.
சிறந்த நடிகை ராணி முகர்ஜி :
அதேபோல, சிறந்த நடிகைக்கான விருது நடிகர் ராணி முகர்ஜி வழங்கப்பட்டது. மிசஸ் சட்டர்ஜி வெர்சஸ் நார்வே என்ற படத்திற்காக அவர் கௌரவிக்கப்பட்டார்.
எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசிக்கு விருது :
தமிழில் வெளியான பார்க்கிங் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதினை பெற்றுக் கொண்டார்.
துணை நடிகைக்கான விருது உள்ளொழுக்கு படத்தில் நடித்தமைக்காக நடிகை ஊர்வசிக்கு வழங்கப்பட்டது.
சிறந்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் :
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பெற்றுக் கொண்டார். வாத்தி படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த தமிழப்படம் பார்க்கிங் :
சிறந்த தமிழ்ப் படமாக ‘பார்க்கிங்’ திரைப்படம் விருதினை தட்டிச் சென்றது. திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பெற்றார். பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைக் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் படிக்க : இரண்டாவது முறையாக கிடைத்த ஆசிர்வாதம் : ஜி. வி. பிரகாஷ் குமார்
மோகன்லால் பெருமிதம் :
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பிறகு உரையாற்றிய நடிகர் மோகன்லால், “இந்த தருணம் எனக்கு மட்டுமே சொந்தமானதல்ல.மலையாள திரைப்படக் குடும்பத்துக்கே சொந்தமானது. இந்த விருதை, எங்கள் துறையின் பாரம்பரியம், படைப்பாற்றலுக்கான கூட்டு மரியாதையாகப் பார்க்கிறேன். மலையாள சினிமாவை கலைநோக்கோடும், கற்பனையோடும் உருவாக்கியவர்களின் சார்பாக இவ்விருதை ஏற்கிறேன். என் கனவுகளிலும் கூட இந்த தருணத்தைக் கற்பனை செய்ததில்லை. அதனால் இது ஒரு கனவு நனவானதல்ல. அதைவிட மிகப் பெரியது. மலையாளத் திரைத் துறைக்கும், கேரள பார்வையாளர்களுக்கும் இவ்விருதை நான் அர்ப்பணிக்கிறேன். சினிமா என் ஆன்மாவின் இதயத் துடிப்பு. மத்திய அரசுக்கு நன்றி” என்று பெருமிதம் தெரிவித்தார்.
===============