பஹல்காம் சுற்றுலாத்தலம் :
America on The Resistance Front : காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று பஹல்காம். ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து, இயற்கை அழகை கண்டு ரசிப்பர். அந்த வகையில் கோடை காலமான கடந்த ஏப்ரல் மாதம், 22ம் தேதி, சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்து இருந்தனர்.
அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை :
அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் காட்டுமிராண்டித் தனமாக சுட்டுக் கொன்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் 'தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்' அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பஹல்காமில் பயங்கர தாக்குல் நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்த, இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என உறுதியளித்தார்.
இந்தியா நடத்திய துல்லிய தாக்குதல் :
அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஒருசில நாட்களில் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத குழுக்களின் அலுவலகங்கள், பயிற்சி முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்தது. விமானப்படை விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் முகாம்கள் தகர்க்கப்பட்டன. இதனால், அதிர்ச்சியில் உறைந்த பாகிஸ்தான், எதிர் தாக்குதலுக்கு முனைந்தாலும், அதில் தோல்வி கண்டு பின்வாங்கியது.
தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்' பயங்கரவாத அமைப்பு :
இதன் ஒருபகுதியாக, பஹல்காமில் தாக்குதல் நடத்திய, 'தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்(The Resistance Front)' அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா(USA) அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவும், உலகளாவிய பயங்கரவாதியாகவும் சேர்க்கிறோம்.
லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவு :
இந்த பயங்கரவாத அமைப்பு ஐநாவால் பயங்கரவாதக் குழுவாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் முன்னணி அமைப்பாக இருக்கிறது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐநா வழிகாட்டுதலின் பேரின் 'தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்(The Resistance Front)' அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அங்கீகரித்து இருப்பதால், அதன் செயல்பாடுகளை முடக்க வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.
====